Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

தமிழக அரசியல் வரலாறு: பாகம்-1



          ஆர்.முத்துக்குமாரின் ‘தமிழக அரசியல் வரலாறு’ புத்தகத்தின் முதன் பாகத்தை வாசித்து முடித்தேன். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது முதல் இந்திரா காந்தி ஆட்சியில் ஒன்னே முக்கால் வருட அவசர நிலைப் பிரகடனம் முடிவுக்கு வரும் வரை உள்ள காலத்தில் தமிழக அரசியல் களம் எப்படி இருந்தது, என்ன சம்பவங்களெல்லாம் நடைபெற்றன, அவற்றின் பின்னணி என்ன என்று எளிய நடையில் படிக்க செம சுவாரசியமாக இருக்கிறது. வரலாறு வேறு, விவரங்கள் கொஞ்சம் வரண்டு போனாலும் வாசகனுக்கு அலுப்பு தட்டிவிடும். ஆனால் ஒரு வெகுஜன அரசியல் இதழில் தொடராக வெளி வந்ததாலோ என்னவோ, ஒரு கதை போல் பரபரவென்று புத்தகம் டாப் கியரில் பறக்கிறது. ஆங்கிலத்தில் ‘The Adventures of…’ என்று தொடங்கும் பல கதைகளைப்போல் இதை ‘The Adventures of Tamil Nadu’ என்று சொல்லலாம். தமிழகத்தின் சரித்திரப் பக்கங்களில் இவ்வளவு சாகசப் பயணங்களா என்று ஆச்சரியப்பட வைக்கும் நூல்.

          இந்நூலை வாசித்து முடிக்கும்போது நூல் நெடுக ஒரு மெல்லிழ இழை அனைத்தையும் இணைப்பதை உணரலாம். அது, ”யாரையும் முழுமையாக ஏற்கவும் முடியாது, முழுமையாக நிராகரிக்கவும் முடியாது”, என்னும் வரலாற்று உண்மை. 2G ஊழலை வைத்தும் குடும்ப அரசியலை வைத்தும் கலைஞரைத் திட்டும் இந்தக் காலத்து யூத்துகளுக்கு இந்நூல் 70-களின் கலைஞரை அட்டகாசமாக அறிமுகப்படுத்தும். எம்.ஜி.ஆரின் நல் பிம்பத்தை நம் முந்தைய தலைமுறையிடமிருந்து கேள்வியின்றி ஏற்றுக் கொண்ட நமக்கு இந்நூல் அவரது மறு பக்கத்தையும் கோடிட்டுக் காட்டும். கிங் மேக்கர் காமராஜரின் ‘K Plan’ எப்படி பூமராங் போல் தமிழக காங்கிரஸின் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கியது, இராஜாஜியின் குலக்கல்வித் திட்டம்(இதன் உண்மையான பெயர் இதுவல்ல) எப்படி அவரது அரசியல் வாழ்வுக்கே தற்காலிகமாக முடிவுரையை எழுதியது, பெரியாருக்கும் இராஜாஜிக்கும் உள்ள ஒற்றுமை என்ன, திமுக-வின் உதயமும் அண்ணாவின் வளர்ச்சியும், அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் அரசுக்கு விழுந்த கரும்புள்ளியான கீழவெண்மணி சம்பவம், காமராஜரா கருணாநிதியா, யாரை ஆதரிப்பது என்று பெரியாருக்கு ஏற்பட்ட நெருக்கடி, சென்னையைக் கேட்ட ஆந்திரா, இன்று வரை வருடா வருடம் தென் தமிழகம் கொந்தளிக்கக் காரணமான முத்துராமலிங்கர்-இம்மானுவேல் சேகரன் பிரச்னை, தமிழகத்தின் பிரதான வரலாற்று நிகழ்வுகளான இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் மற்றும் கச்சத்தீவு விவகாரம்(இவ்விரண்டைப் பற்றியும் ஆசிரியர் தனியே புத்தகங்களாகப் போட்டிருக்கிறார், அவற்றையும் வாங்கி வாசியுங்கள்), மாநிலங்களுடனான எல்லைப் பிரச்னை, எம்.ஜி.ஆர் கருணாநிதி இடையே விழுந்த விரிசல், திமுக, அதிமுக எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்த இராஜாஜியும் காமராஜரும், அதிமுக தொண்டர்களின் உடலில் அண்ணாவின் உருவத்தைப் பச்சை குத்தச் சொன்ன எம்.ஜி.ஆர், திமுக அரசின் மதுவிலக்கு ஒழிப்பு நடவடிக்கை, கட்சியின் கொள்கை என்ன என்று கேட்டதற்கு அண்ணாயிசம் என்று பதிலளித்த எம்.ஜி.ஆர், ’ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்ற பிரபலமான அரசியல் வசனத்தின் பிறப்பிடம், மாநில சுயாட்சி கொள்கையைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்திய ம.பொ.சி, ஒரு வதந்தியை நம்பி அண்ணா திமுகவை ஒரே நாளில் அகில இந்திய அண்ணா திமுக என்று பெயர் மாற்றம் செய்த எம்.ஜி.ஆர், இதற்கு நடுவே கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழகத்தில் தன் செல்வாக்கை இழந்தது, மாநில சுயாட்சிக் கொள்கைக்குப் பெப்பே காட்டிய அஇஅதிமுக, கலைஞர் ஆட்சி டிஸ்மிஸ், சர்க்காரியா கமிஷன், மிசா சட்டத்தில் உள்ளே அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட முரசொலி மாறன், ஸ்டாலின் போன்ற தலைவர்கள், காமராஜர் இந்திரா காந்தி குறித்துப் போட்ட தப்புக்கணக்கு, அண்ணா, பெரியார், இராஜாஜி, காமராஜர் ஆகியோரின் இறப்பு ஏற்படுத்திய தாக்கம், குறிப்பாக எந்த அரசாங்கப் பதவியையும் வகிக்காத பெரியாருக்கு அரசு மரியாதையுடன் நடந்த இறுதி காரியங்கள், “Periyar is the father of Tamil Nadu” என்று கவுரவப்படுத்திய கலைஞர், ஜெயப்பிரகாஷ் நாயாயணனிடம் பல்பு வாங்கிய எம்.ஜி.ஆர், இந்தியாவில் ஜனதா கட்சியின் உதயத்திற்குக் கேயாஸ் தியரியின்படிக் காரணமான கலைஞர், அவசர நிலை காலத்தில் தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் பத்திரிகைத் துறை சந்தித்த சவால்கள், என்று மிக விரிவாகப் பயணிக்கிறது இந்நூல். காலையில் வாசிக்க உட்கார்ந்தால் மாலையில் முடித்துவிடலாம்.

          வெளி நாட்டிலிருந்தோ வெளி மாநிலத்திலிருந்தோ தெரிந்தவர் எவரேனும் வந்தால், “உங்க ஊரில் அப்படியாமே? கேள்விப்பட்டேன்?”, என்று பேச்சை வளர்க்க ஆரம்பிப்போமே, அதே போல் நீங்கள் வெளியூர் எங்காவது செல்லும்போது எவரேனும், “உங்க ஊரில் இப்படி நடந்துதாமே? இப்படிப் பண்ணீங்களாமே?”, என்று கேட்டால் அப்பொழுது, ”நாங்களா அப்படிப் பண்ணோம்?”, என்று திருதிருவென்று முழிக்காமல் இருக்க இந்தப் புத்தகம் உங்களுக்குப் பயன்படும். உங்களுக்கென்று பிரத்யேகமாக ஒரு பிரதி வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

          இரண்டாம் பாகத்தை வாசிக்கத் துவங்கியாகிவிட்டது, வண்டி புயல் வேகத்துல போயிக்கிட்டு இருக்கு.

தமிழக அரசியல் வரலாறு: பாகம்-1
ஆர்.முத்துக்குமார்
கிழக்குப் பதிப்பகம்
ரூ.300/-
415 பக்கங்கள்

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி