Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

சதுரங்கச் சுட்டிகள்

“ஒவ்வொரு மேட்ச்லயும் எதையாச்சும் கத்துக்கணும்!”
                                                                                                                                                                 
          வைஷாலி - பிரஞ்யானந்தா. விஸ்வநாதன் ஆனந்தின் சதுரங்க வாரிசுகள் என்று சொல்லுமளவிற்குத் தங்களின் பதக்கங்களின் மூலமாகத் தமிழகத்திற்குப்  பெருமையை சேர்த்துக்கொண்டிருக்கும் சாதனைச் சுட்டிகள். அதிலும் பிரஞ்யானந்தா கடந்த 25ம் தேதி பாண்டிச்சேரியில் நடைபெற்ற ஏழு வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான போட்டியில் முதல் இடம் பிடித்து ஒட்டுமொத்த இந்திய சதுரங்க உலகத்தின் கவனத்தையும் தன்பால் ஈர்த்துள்ளார். மேலும் கடந்த மாதம் இலங்கையில் நடைபெற்ற ஆசிய அளவிலான எட்டு வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் பிரஞ்யானந்தாவும் பன்னிரண்டு வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் வைஷாலியும் முதலிடம் பெற்று அசத்தியுள்ளனர். வாழ்த்துக்கள் சுட்டீஸ் !

"சிலர் பிறக்கும்போதே திறமையுடன் பிறப்பார்கள் சார், வைஷாலி மாதிரியும் பிரஞ்யானந்தா மாதிரியும் !", என்று மகிழ்ச்சியுடன் ஆரம்பித்தார் இவர்களின் பயிற்சியாளர் திரு. தியாகராஜன். "அக்கா இதுவரைக்கும் ஒன்பது வயசுக்குட்பட்டதுல ரெண்டு ஸ்டேட் டைட்டில், பதினொரு வயசுக்குட்பட்டதுல தொடர்ந்து மூனு வருஷம் சாம்பியன், இப்போ பதிமூன்று வயசுக்குட்பட்டோருக்கான ஸ்டேட் டைட்டில், போன வருஷம் பிலிப்பைன்ஸ்ல நடந்த காமன்வெல்த் போட்டியில ஆறாவது, நேஷனல் லெவல்ல இரண்டாவது, இப்போ இலங்கைல கோல்ட் !", என்று அடுக்கிக்கொண்டே போனார்.

          அக்கா எட்டடி பாய்த்தால் தம்பி சும்மா இருப்பாரா ? சும்மா காட்டு காட்டு என்று காட்டுகிறார் ! இன்னும் மழலைத் தமிழ்கூடப் போகவில்லை, அதற்குள் உலகத்தரம் வாய்ந்த ஆட்டக்காரராகி விட்டார். "தம்பி பெரிய பசங்களோட செஸ் ஆடித்தான் பழக்கம் ! நாலு வயசுல செஸ் விளையாட ஆரம்பிச்சு அவரோட ஆறாவது வயசுல இந்தியத்  தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்த மிக இளவயது சதுரங்க ஆட்டக்காரர்ங்கற பேரை வாங்கிட்டார். போன வருஷம் புனேல நடந்த தேசிய அளவிலான போட்டியில இரண்டாவதா வந்து இலங்கை ஆசியக்கோப்பைக்கு குவாலிஃபை ஆனார்; கோல்ட் அடிச்சார் ! இப்போ பாண்டிச்சேரியிலும் அசத்திட்டார் !", என்று ஒருவழியாக முடித்தார் ! அத்தனைப் பதக்கங்களைத் தன்வசம் வைத்திருக்கிறார்கள் இச்சாதனைச் சுட்டிகள் !

"ரெண்டு பேரும் உலக லெவல்ல கோல்ட் அடிப்பாங்க சார்", என்றார் 'Blooms Academy' வேலாயுதம் ஒற்றை வரியில். "அடுத்த வருஷம் நடக்கிற ஆசிய மற்றும் உலக அளவிலான போட்டியில் கலந்துக்கற வாய்ப்பு ரெண்டு பேருக்கும் தேடி வந்திருக்கு. அதுலயும் இவங்க ரெண்டு பேரும் அசத்ததான் போறாங்க !", என்று நம்பிக்கையுடன் சொன்னார்.

சுட்டீஸ் இருவரும் செஸ் ஆடும்போது படு சீரியஸாம்! சரி, அப்போ வீட்டில்?

"எல்லாரும் வாழ்த்து சொல்லும்போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்", என்று ஆரம்பித்தார் சாதனைச் சுட்டிகளின் தந்தை திரு. ரமேஷ் பாபு. "சில சமயம் ரெண்டு பேரும் போடற சண்டையில வீட்டுல ஒரு வேலையும் நடக்காது ! அமைதியா விளையாடிட்டிருப்பாங்க, திடீர்னு எதுக்கோ சண்டை வரும், சும்மா கொஞ்ச நேரம்தான். அப்பறம் மறுபடியும் சேர்ந்துக்குவாங்க. வழக்கமா அக்கா தம்பிங்க எப்படி இருப்பாங்களோ அப்படி இருக்காங்க, பல சமயம் வைஷாலி தம்பிக்காக விட்டுக்கொடுத்திடுவா. குழந்தைகள் குழந்தைகளாவே வளர்ந்துட்டு வர்றாங்க"

"சின்ன வயசுல சும்மா இருக்கிறதுக்கு பதிலா ஏதாவது கோச்சிங்ல சேர்த்து விடலாமேனுதான் வைஷாலியைச் சேர்த்து விட்டோம். அவங்க பின்னி எடுத்த‌தைப் பார்த்ததும் தம்பியையும் சேர்த்துவிட்டோம், இப்போ இவரும் அவருக்கு சரிசமமா கலக்கிட்டிருக்காரு!"

"ரெண்டு பேருக்கும் எண்ணங்கள் நல்லா ஒத்துப்போகுது. அப்பப்போ தம்பிக்கு வைஷாலி மூவ்ஸ் சொல்லிக்குடுப்பாங்க, அவரோட ஆட்டத்தை நல்லா அனலைஸ் பண்ணி இங்க நீ தப்பு பண்றனு சொல்லுவாங்க. ஒரு தந்தையா இதையெல்லாம் பார்க்கும்போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, இவ்வளவு சின்ன வயசுல பல பசங்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனா இவங்க ஆனது ரொம்ப பெரிய விஷயம். ரொம்ப சந்தோஷம் சார்", என்றார் பரவசத்துடன்.

“’போட்டியில ஜெயிக்கணும்னு விளையாடக்கூடாது, ஒவ்வொரு மேட்ச்லயும் எதையாச்சும் கத்துக்கணும்னுதான் விளையாடணும்; இந்த கப், மெடல் எல்லாம் ஜெயிச்சதுக்காக கிடைச்சது இல்ல, மத்தவங்களை விட அதிகமா ஏதோ ஒரு விஷயத்தைக் கத்துக்கிட்டதுக்காகதான் கிடைச்சது’னு கோச் அங்கிள் அடிக்கடி சொல்லுவாங்க", என்றார் வைஷாலி, புன்னகை மாறாமல். "ஏன்னா இந்த மாதிரி சின்ன சின்ன மேட்சை எல்லாம் நம்ம கோலா வெச்சுக்கக்கூடாது. நம்மளோட அல்டிமேட் எய்ம் பெருசா இருக்கணும். ஒவ்வொரு போட்டியிலும் நான் என்ன தப்பு பண்ணேன், எதிர்ல இருக்கறவங்க என்ன தப்பு பண்ணாங்க, இதையெல்லாம் அனலைஸ் பண்ணிதான் நான் அடுத்த போட்டிக்குத் தயாராவேன், சிம்பிள் ! ”, என்று வெற்றியின் மிதப்பு துளிகூட இல்லாமல் சொல்லும் வைஷாலியின் வார்த்தைகளில் அத்தனை முதிர்ச்சி!

சதுரங்கம் மட்டுமல்லாமல் சுட்டிகள் படிப்பிலும் அசத்திக்கொண்டிருக்கின்றனர். ”ஒன்னு ரெண்டு மூனு-னு தான் ரேங்க் வாங்கிட்டு வர்றாங்க ரெண்டு பேருமே. இவங்க திறமைய பாத்துட்டு வேலம்மாள் உயர்நிலைப்பள்ளி இவங்ளோட படிப்புச் செலவையெல்லாம் ஏத்துகிடுச்சு. அப்பப்ப போட்டி அது இதுனா கூட லீவ் தர்றாங்க. பல பேரோட ஒத்துழைப்புலதான் ரெண்டு பேரும் மணியா உருவாகிட்டு வர்றாங்க”, என்றார் தாய் நாகலட்சுமி. எங்கு எப்பொழுது போட்டி நடந்தாலும் இருவரையும் இவர்தான் அழைத்து சென்று உற்சாகம் ஊட்டுகிறார்.

நிற்க, நவம்பரில் சுலோவேனியாவில் நடக்கவிருக்கும் உலக அளவிலான போட்டியில் வைஷாலி மட்டும்தான் கலந்துகொள்ளப்போகிறார், ஏனெனில் பத்து வயதுக்கு மேற்பட்ட வீரர்களுக்குத்தான் அரசாங்கம் செலவை ஏற்றுக் கொள்கிறது. இத்தனை இளம் வயதில் பிரஞ்யானந்தா அத்தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வைத்துவிடுவார் போலிருக்கிறது! அத்தனை மெடல்களையும் கேமராவின் கண்களுக்குள் கொண்டு வரமுடியவில்லை என்றால் பார்த்துக்கொள்ளவும்.

"இந்தியக் குழந்தைகள் சதுரங்க உலகத்திற்குள் வரவேண்டும்", என்ற விஸ்வநாதன் ஆனந்தின் குரல் இங்கு கேட்க ஆரம்பித்து விட்டது. அதற்கு ஏற்றார்போல்தான் பிரஞ்யானந்தாவின் பதிலும் அமைந்தது.
“உங்களுக்கு எதுனா ரொம்ப பிடிக்கும்?”
“ஹும்ம்ம், கோல்து மெதல்!”

- வ. விஷ்ணு 
(2012)

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி