Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 4

 முன்தொடர்ச்சி:
காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 3

முன்குறிப்பு: லேண்ட்மார்க்கில் மனு பகவான்(21ம் நூற்றாண்டு மனிதர்) எழுதிய ‘The Peacemakers: India and the Quest for One World’ என்ற புத்தகத்தைக் கண்டவுடனே காணாததைக் கண்டது போல் ஐநூறு ரூபாய்க்கு அடித்துப் பிடித்து வாங்கினேன். ஹார்ப்பர் கோலின்ஸ் பதிப்பகத்தின் 237 பக்க வெளீயீடு. காந்தியைப் போல் நேருவும் இன்று எவ்வளவு தேவைப்படுகிறார் என்று அறிய இப்புத்தகம் அவசியம். இப்புத்தகம் சொல்லிய தகவல்களில் வெகு சில தகவல்களை மட்டும் இங்கே முடிந்தவரை தருகிறேன்.


(தொடர்கிறது)

          ஆண்டு 1944. அமெரிக்க பிரிட்டன் படைகள் ஃப்ரான்சிலிருந்து கிழக்கு முகமாக ஜெர்மனி நோக்கி முன்னேறத் துவங்கியிருந்த சமயம். ரஷ்யப் படைகள் மேற்கு முகமாக ஜெர்மானியர்களைத் துரத்தி பெர்லின் நோக்கி வந்துக்கொண்டிருந்தது. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் பிடி கொஞ்சம் கொஞ்சமாக நழுவிக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில் மூன்று பெரிய சக்திகளான பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா பல்வேறு விஷயங்களைப் பற்றிக் கலந்தாலோசிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக ரூஸ்வெல்ட் நினைத்தார்.

          ரூஸ்வெல்ட், சர்ச்சில் மற்றும் ஸ்டாலின் இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அப்பொழுது ரூஸ்வெல்டின் உடல்நலம் கடுமையாக மோசமடைந்திருந்தது. வெளியே இருந்து பார்க்கும் ஒருவருக்கு அவரைக் கண்டால் நடைபிணம் போலத் தோன்றும். அந்த அளவிற்கு முகம் வெளிறிப் போயிருந்தது. பேச மிகவும் சிரமப்பட்டார். ஆனாலும் இந்த நேரத்தில் மூன்று பெரிய சக்திகளின் தலைவர்கள் சந்தித்தே ஆகவேண்டும் என்று பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தார். போருக்குப் பிந்தைய உலகம், அது பயணிக்கப் போகும் திசை, போரில் தோற்கப் போகும் நாடுகளின் கதி போன்றவை பேச்சுவார்த்தைகளில் முக்கிய இடம் பிடித்தன.

          சர்ச்சில் தன் கொள்கைகளில் விடாப்பிடியாக இருந்தார். எப்படிப் பேசினாலும் இறுதியில் காலனியாதிக்கம் தவறல்ல என்ற கருத்திற்கே வந்து நின்றார். அவரைப் பொதுவாக சமாளிப்பது ரூஸ்வெல்ட்தான். ஆனால் அவரோ அப்பொழுது பலவீனமாக இருந்தார். எனவே அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் சர்ச்சிலின் கையே ஓங்கியிருந்தது. ஸ்டாலினுக்குப் போர் நின்றாக வேண்டும் அவ்வளவே. போருக்குப் பிந்தைய ரஷ்யாவைப் பற்றிய தெள்ளத் தெளிவான பார்வை அவரிடம் இருந்தது. எனவே போருக்குப் பிந்தைய உலகம் பற்றிப் பேசும்போதெல்லாம் அவர் பெரிதாக கருத்து வேற்றுமை இருப்பதாகக் காட்டிக்கொள்ளவில்லை.

          முதலில் மூன்று பெரிய சக்திகளின் நோக்கம் உலகத்தை ஆளுவதல்ல, உலகத்திற்குத் தன்னாலான சேவைகளை செய்வதே என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் என்றார் ரூஸ்வெல்ட். சர்ச்சில் ஆமோதித்தார். அப்படியானால் காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகளுக்கு அதன் ஆளும் நாட்டின் ஆட்சி பிடிக்கவில்லை என்றால் அந்தப் பிரச்னையை சர்வதேச மன்றத்தில் சொல்ல உரிமை உண்டு என்றார் ரூஸ்வெல்ட். ஆமாம் நிச்சயமாக என்றார் சர்ச்சில். மேலும் உதாரணத்திற்கு ஹாங்காங்கை பிரிட்டன் ஆட்சி செய்தது போதும் என்று சீனா நினைத்தால் அதை சர்வதேச மன்றத்தில் சொல்ல முழு உரிமையும் உண்டு என்றார். பேச்சு வார்த்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது.

          அப்படி சர்வதேச மன்றத்திற்கு எடுத்து வரப்படும் பிரச்னைகள் சர்வதேச பாதுகாப்புக் குழுவால் பரிசீலனை செய்யப்படும் என்றார் ரூஸ்வெல்ட். மிக அற்புதமான யோசனை என்றார் சர்ச்சில். மேலும் உதாரணத்திற்கு பிரிட்டன் ஹாங்காங்கை விடவேண்டும் என்ற சீனாவின் மனுவை பாதுகாப்புக் குழு பரிசீலனை செய்யும்போது அதில் பிரிட்டன் தலையிடக்கூடாது என்றும் அதன் வீட்டோவை இதில் உபயோகப்படுத்த முடியாது என்றும் சொன்னார். ரூஸ்வெல்ட்டிற்கு மகிழ்ச்சி. சர்ச்சில் இவ்வளவு எளிதில் சம்மதிப்பார் என்று அவர் நினைக்கவில்லை. ஆனால் அங்குதான் தான் யார் என்று காண்பித்தார் சர்ச்சில். இதுதான் அவர் அடுத்து சொன்னது.

“ஆனால், ஆனால், உதாரணத்திற்கு ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாதுகாப்புக் குழு தீர்ப்பளித்தாலும், பிரிட்டனுக்கு ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைப்பது நல்ல முடிவாகத் தோன்றவில்லையென்றால், பாதுகாப்புக் குழு தன் தீர்ப்பை வைத்து பிரிட்டனைக் கட்டாயப்படுத்தவோ ஆணையிடவோ முடியாது.”

          சில நாட்கள் கழித்து மீண்டும் மூன்று தலைவர்களும் சந்தித்துக் கொண்டார்கள். இம்முறை பாதுகாப்புக் குழுவின் கட்டமைப்பைப் பற்றியும் அந்த உலகளாவிய அமைப்பில் உள்ள நாடுகளின் ஆரம்ப கட்ட ஓட்டுரிமைப் பற்றியும் முடிவு செய்ய. ஓட்டுரிமை குறித்து இந்த மூன்று சக்திகள் மட்டும் முடிவு செய்தல் சரியாக இருக்காது என்றும் அனைத்து நாடுகளின் தலைவர்களும் கூடி இது பற்றி விவாதிக்க வேண்டும் என்றும் ரூஸ்வெல்ட் நினைத்தார். அதனை சர்ச்சிலிடம் சொன்னார். சர்ச்சில் ஆமோதித்தார். ஆனால் மீண்டும் தான் யார் என்று காட்டினார்.

“அனைத்து நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துக்கொள்ளும் மாநாடு நடக்கட்டும். ஆனால், ஆனால், அந்த மாநாட்டில் பிரிட்டனின் நிலைப்பாடு குறித்தோ அதன் ஆட்சிமுறை குறித்தோ ஏதேனும் சிறிய நாடு கேள்வி எழுப்பி, அதற்குப் பெரிய சக்திகள் ஏதேனும் எழுந்து அவர்கள் சார்பாக பிரிட்டனை விமர்சித்து, அதற்கு பிரிட்டன் பதிலளித்துத் தற்காத்துக் கொள்ளும் சூழ்நிலை வரக்கூடாது.”

          ரூஸ்வெல்ட்டின் பலவீனம் சர்ச்சிலின் பலமானது. சர்ச்சில் வைக்கும் கோரிக்கைகள் எல்லாம் ஏற்கப்பட்டு அனைத்து நாடுகளின் தலைவர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்வதற்கான வேலைகள் துவங்கின. அந்த மாநாட்டிலேயே ஒரு உலகளாவிய அமைப்பை அதிகாரப்பூர்வமாகத் துவங்கிவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைத்தார் ரூஸ்வெல்ட். அப்படியே முடிவு செய்யப்பட்டது. மாநாட்டிற்கான தேதி ஏப்ரல் 25 என்று குறிக்கப்பட்டது. இடம்: சான் ஃப்ரான்சிஸ்கோ.

          முதலில் பிரிட்டன் அரசு இந்தியப் பிரதிநிதிகளைத் தானே முடிவு செய்யும் என்று சொன்னபோது அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. பிரிட்டன் அரசு இந்தியாவில் நிகழ்த்தும் கொடுமைகளை மூடி மறைக்கவே இப்படி செய்கிறது என்று பலரும் நினைத்தார்கள். விஜயலட்சுமி காந்திக்கு ஒரு கடிதமனுப்பினார். அந்த மாநாட்டிற்குத் தன்னை இந்தியப் பிரதிநிதி ஆக்க வேண்டும் என்று அறிக்கை விடுமாறு வேண்டுகோள் விடுத்தார். காந்தி மறுத்துவிட்டார். அந்த உலகலாவிய அமைப்பு சம்பந்தமான எதிலும் தான் நேரடியாக ஈடுபட விருப்பமில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார். ஆனால் அவர் வெளியிட்ட வேறொரு அறிக்கை விஜயலட்சுமிக்கு உதவியது. “நான் ஒரு வெளியாள் என்பதால் இந்த உலகாவிய அமைப்பால் என்ன நிகழப்போகிறது என்று தெரியவில்லை. ஆனால் அந்த அமைப்பு பயன்படுத்துகிற உலகப் பாதுகாப்பு என்னும் பதத்திற்குப் பின்னால் அச்சமே இருக்கிறது. போர் என்பதே ஏமாற்றுவதால்தான் ஏற்படுகிறது. போரின் மீது நம்பிக்கை வைப்பதைப் பெரிய நாடுகள் முதலில் கைவிட்டுவிட்டு அமைதியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அதன் முதல் கட்டமாக இந்தியாவின் மீது நம்பிக்கை வைக்கப்பட்டு இந்தியாவின் பிரதிநிதிகளை இந்தியாவே தேர்வு செய்ய வேண்டும்.”

          காந்தியின் அந்த அறிக்கை இல்லாவிட்டாலும் விஜயலட்சுமி இந்தியப் பிரதிநிதி ஆகியிருப்பார். அந்த அளவிற்கு அவரது செல்வாக்கு அப்பொழுது உச்சத்தில் இருந்தது. ஆனால் அந்த அறிக்கை அவருக்குப் பெரிதும் உதவியது. நிரந்தர அமைதிக்கு காந்தி நான்கு பரிசீலனைகளை வைத்தார். முதலில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும். அந்த முடிவு உலகின் மற்ற சிறு நாடுகள் படிப்படியாக விடுதலை அடைய வழிவகுக்கும். இரண்டாவது, உலக அமைதி பற்றிய நம்பிக்கை ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாட்டின் மக்களையும் அடைய வேண்டும். அதாவது எதிரிகளை நண்பர்களாக மாற்றாமல் நிரந்தர அமைதி சாத்தியமில்லை. மூன்றாவது, போரில் தோற்ற நாடுகள் எந்த சூழ்நிலையிலும் அவமானப்படுத்தப் படக்கூடாது, எந்த சூழ்நிலையிலும் அவற்றின் மீது கடுமை காட்டப்படக்கூடாது. நான்காவது அனைத்து நாடுகளும் ஆயுதங்களைக் கைவிட வேண்டும். ஒரு உலகளாவிய காவல்துறையும் இராணுவமும் நிறுவப்பட வேண்டும். ஆனால், இவை அமைதிக்கான கருவிகளாக இருக்கக்கூடாது. மாறாக அவை மனிதக் குறைகளைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் விளைவாகவே இருக்க வேண்டும். “இந்தியாவின் சுதந்திரத்தைக் கேட்பதில் சுயநலம் இல்லை. அதில் உலகளாவிய அமைதிக்கான பொதுநலமே இருக்கிறது. இந்தியாவின் தேசியம் உண்மையில் சர்வதேசியம்”, என்றார்.

          காந்தியின் இந்தக் கருத்துகளால் அவர் இதிலும் ஒரு தீவிர இலட்சியவாதியாக இருக்கிறாரோ என்ற விமர்சனம் எழுந்தது. ”நான் ஒரு நடைமுறை இலட்சியவாதி. எனக்கு சமரசத்தில் நம்பிக்கையுண்டு, அது கொள்கைக்கு முற்றிலும் எதிராக இல்லாத பட்சத்தில். உலக அரசாங்கம் ஒன்று ஏற்படுமானால் அது நான் நினைத்தவாறு ஆரம்பத்தில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் என் கொள்கைகளுக்கு மாறாக அது இருக்காத வரையில் நான் அதோடு சமரசம் செய்துகொண்டு அதனை ஆதரிப்பேன், முக்கியமாக அது அகிம்சையின் மீது கட்டமைக்கப்பட்டால்.”, என்று காந்தி தெளிவுபடுத்தினார்.

          மாநாட்டிற்கான நாள் நெருங்க நெருங்க விஜயலட்சுமியை எப்படியாவது மாநாட்டிற்கு வர விடாமல் செய்யப் பல முயற்சிகளை பிரிட்டன் அரசு செய்தது. இது சம்பந்தமாக அமெரிக்காவை அயலக உறவு ரீதியாக நெருக்கிப் பார்த்தது. அப்பொழுது எலியனார் ரூஸ்வெல்ட் தன் அதிகாரிகளுடன் விஜயலட்சுமியைத் தடுக்கலாமா என்று ஆலோசனை நடத்தினார். இந்தியா விஷயத்தில் பிரிட்டன் இவ்வளவு பிடிவாதமாக இருப்பது பிரிட்டன் அமெரிக்க உறவை பாதித்துவிடக்கூடாது என்று நினைத்தார். அதிபர் ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் அப்பொழுதுதான் மரணமடைந்திருந்தார். சான் ஃப்ரான்சிஸ்கோ மாநாட்டைப் பார்ப்பதற்கு முன்னாலேயே அவர் உயிர் பிரிந்திருந்தது. பிரிட்டன் அமெரிக்க உறவைப் பற்றி சிந்தித்த எலியனார் ரூஸ்வெல்ட் அதே நேரத்தில் அமெரிக்க மக்கள் இந்தியாவின் பக்கம் இருப்பதையும் கணக்கில் எடுத்துக்கொண்டார். ஒருவர் எந்த கொள்கையின் சார்புடையவராக இருந்தாலும் அதை பொதுவில் சொல்வதற்கான சுதந்திரத்தை வழங்க வேண்டும் என்பது அமெரிக்காவின் அடிப்படைக் கொள்கை. அதை மீற வேண்டாம் என்று விஜயலட்சுமியை அமெரிக்க அரசு தடுக்கவில்லை.

          ஆனால் எலியனார் ரூஸ்வெல்ட்டிற்குத் தொடர்ந்து விஜயலட்சுமி விவகாரம் சிக்கலைக் கொடுத்தது. ஏற்கனவேயே விஜயலட்சுமியிடம் பாஸ்போர்ட் இல்லை. ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட்டால் இங்கு அழைத்து வரப்பட்டவர் அவர். ரூஸ்வெல்ட் இருந்தவரை பிரச்னை இல்லை. ஆனால் இப்பொழுது அவரது பாஸ்போர்ட் பற்றிக் கேள்வி எழுந்தால் என்ன சொல்வது? நன்றாக யோசித்த பின் இறுதியாக, நடப்பது நடக்கட்டும், இப்பொழுதைக்கு விஜயலட்சுமியைத் தடுப்பது நல்ல முடிவல்ல, என்று எலியனார் ரூஸ்வெல்ட் முடிவு செய்தார்.

          மாநாடு துவங்குவதற்கு ஒரு நாள் முன்பு ஒரு கூட்டத்தில் பேசிய விஜயலட்சுமி, புதிய உலக அமைப்பின் அடித்தளத்தையே கேள்விக்குள்ளாக்கினார். “புதிய உலகைப் பழைய அடித்தளத்தில் அமைக்கிறார்கள். அதை இடித்துவிட்டுப் புதிய அடித்தளம் அமைத்து அதன் மேல் புதிய உலகை நிர்மாணித்தால் மட்டுமே இந்த மாநாட்டிற்கு ஒரு அர்த்தம் இருக்கும்.”, என்றார். ”இன பேதமின்றி உலகின் அனைத்து சுதந்திரப் போராட்டங்களுக்கும் சமத்துவத்தை நிறுவும் முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கிறது.”, என்று சொல்லி மாநாட்டிற்கு முதல் நாள் இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெளிவு படுத்தினார்.

          அடுத்த நாள். கிட்டத்தட்ட அனைத்து நாடுகளின் சார்பாகவும் பிரதிநிதிகள் வந்திருந்தனர். மாநாடு ஆரம்பித்தது. எதைத் தவிர்க்க வேண்டும் என்று சர்ச்சில் விரும்பினாரோ அதை விஜயலட்சுமி தன் முதல் பேச்சிலேயே செய்தார். பிரிட்டனைக் கடுமையாகத் தாக்கினார். ’பிரிட்டன் சிங்கத்தின் வாலைத் திருகினார் விஜயலட்சுமி’ என்று அமெரிக்க பத்திரிகைகள் எழுதின. வெண்டெல் வில்க்கியின் ‘ஒன்றுபட்ட உலகம்’ பற்றிய பேச்சை மேற்கோள் காட்டி அதற்கு நேர் மாறாக எவ்வாறு சர்ச்சில் நடந்துக்கொள்கிறார் என்று ஆதாரங்களைத் தோண்டியெடுத்து முன்வைக்க ஆரம்பித்தார். பிரிட்டன் பிரதிநிதிகள் நெளிய ஆரம்பித்தனர்.

          அந்த மாநாட்டிற்கு வந்திருந்த பிரதிநிதிகளில் பெரும்பாலானோரின் ஆதரவை விஜயலட்சுமி முதல் நாளே பெற்றுவிட்டார். அடுத்த நாள் தன் செயல்முறையை மாற்றிக்கொண்டார் விஜயலட்சுமி. அவரது அடுத்த இலக்கு, அமெரிக்க மக்கள். அமெரிக்க மக்களின் சுதந்திர மனப்பான்மையை வெகுவாகப் பாராட்டினார். “உண்மையில் உங்களுடைய் சுதந்திரத்திற்காகப் போராடிய உங்களிடமே வந்து இந்தியாவின் சுதந்திரத்தைப் பற்றி நான் பேசக்கூடாது. நீங்களே முன்வந்து உங்கள் தெருக்களில் நின்று இந்தியாவின் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுக்க வேண்டும். மற்றவர்களின் சுதந்திரமற்ற நிலையை மாற்ற நீங்கள் முயற்சி எடுக்கவில்லை என்றால் உங்களுடைய சுதந்திரத்தையே நீங்கள் அர்த்தமற்றதாக்குகிறீர்கள்.”, என்றார். ”இந்தக் மாநாட்டின் ஒவ்வொரு பேச்சும் நம் விருப்பத்தினைப் பிரதிபலிப்பதாக உள்ளது. ஆனால் வார்த்தைகள் மட்டும் போதாது. உண்மையில் நாம் நம் கொள்கைகளில் இறுதிவரை தெளிவாக இருக்க வேண்டும். அட்லாண்டிக் பத்திரத்தை அனைவருக்குமானதாக ஆக்க வேண்டும்.”, என்றார்.

          விஜயலட்சுமியின் சீற்றத்தைக் கண்டவுடன் சர்ச்சில் இதற்கெல்லாம் பதில் சொல்லத் தயாராக இருக்கிறார் என்று வதந்திதள் கிளம்பின. அது களத்தில் மேலும் சூடேற்றியது. சில தினங்களில் சர்ச்சில் பதிலளிக்கப்போகிறார் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டவுடன் விஜயலட்சுமி அந்த மாநாட்டில் தனது அடுத்தக் கட்டத் தாக்குதலைத் தொடுத்தார். இந்தியாவிற்கு உடனே சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்ற தீர்மானம் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று முழங்கினார். “உலகில் ஐந்தில் ஒரு பகுதி பிரிட்டனின் காலனியாதிக்கக் கொள்கையால் சுயமரியாதை இழந்து, சுதந்திரம் இழந்து, அமைதி இழந்து, முன்னேற்றமடையாமல் இருக்கிறது. அப்படிப்பட்டக் கொள்கையை எதிர்க்காமல் இந்த உலக அமைப்பிற்கான மாநாடு நடைபெறுகிறது என்றால் அதை சத்தமே இல்லாமல் இந்த மாநாடு ஆதரிக்கிறது என்றே பொருள். போருக்குப் பிந்தைய உலகம் மீண்டும் ஏகாதிபத்தியத்தில் கைகளின் செல்லக்கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். நான் என் நாட்டிற்காக மட்டும் இங்கு பேச வரவில்லை. நாம் போருக்குப் பிந்தைய உலகம் பற்றி விவாதிக்கும் போது சர்வ சாதாரணமாக ஆசியாவில் அடிமைப்பட்டுக் கிடக்கும் 600 மில்லியன் மக்களைப் பற்றி மறந்துவிடுகிறோம். அவர்கள் சார்பாகவும்தான் நான் இங்கு பேச வந்துள்ளேன். அவர்களுக்கு சுதந்திரமும் நியாயமும் கிடைக்கும்வரை உண்மையான உலக அமைதி சாத்தியமே இல்லை. இந்திய சுதந்திரத்தை இந்த மாநாடு முதலில் அங்கீகரிப்பதன் மூலமாக மட்டுமே இந்த ஒட்டு மொத்த உலகிற்கு ஒரு அமைதியான நவீன உலகத்தை வழங்குவதற்கான வாக்குறுதியை அதனால் அளிக்க முடியும்”, என்றார்.

          அடுத்த நாள் விஜயலட்சுமிக்கு மாநாட்டின் பொதுச் செயலாளரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. ”உங்களின் கோரிக்கைகளும் பேச்சின் மையக் கருத்துகளும் இந்த மாநாட்டின் நோக்கத்தோடு ஒத்துப் போகவில்லை. நாடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்த மாநாடு கூட்டப்படவில்லை. ஒரு சர்வதேச அமைப்பைத் துவக்குவதற்காகவே இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது”, என்று அக்கடிதத்தில் எழுதியிருந்தது. ஆக, தோற்கப்போகிற ஒரு போரில் தான் ஈடுபட்டிருப்பதை விஜயலட்சுமி உணர்ந்தார். முப்பெரும் சக்திகளின் அனுமதியில்லாமல் மாநாட்டில் எதுவும் சாத்தியமில்லை என்று புரிந்தது. ஆனால் தன் முயற்சிகளை விஜயலட்சுமி கைவிடவில்லை. உண்மையில் அடுத்த நாள் முதல் தாக்குதல் இருமடங்கானது. சர்ச்சிலுக்கு நெருக்கமான விஷயமான, நாடுகள் மீதான உரிமம் பற்றிப் பேச ஆரம்பித்தார். “பிரிட்டன், ஃப்ரான்ஸ், நெதர்லாந்து போன்ற காலனியாதிக்க நாடுகள் ’தன்னாட்சி’யை ஆதரிப்பதாக சொல்கின்றன. அதென்ன ‘தன்னாட்சி’? ’சுதந்திரம்’ என்ற பதத்திற்கு பதில் ‘தன்னாட்சி’ என்ற பதத்தை உபயோகப்படுத்தி சாமர்த்தியமாக நடந்துக்கொள்கிறார்கள். ’சுதந்திரம்’ என்கிற வார்த்தை பல விஷயங்களை நேரடியாகத் தெளிவுபடுத்துகிறது. ஆனால் ‘தன்னாட்சி’ அப்படி அல்ல. பிரிட்டன் சொல்கிற ‘தன்னாட்சி’ பழைய ஏகாதிபத்திய அடக்குமுறையின் மறுவடிவமே.”, என்றார்.

          இதற்கு மேலும் அமைதி காப்பது நல்லதல்ல என்ற முடிவுக்கு வந்தார் சர்ச்சில். ஏற்கனவேயே இந்தியா விஷயத்தில் ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட்டும் வெண்டெல் வில்க்கியும் அவரை நெருக்கியிருந்தார்கள். ரூஸ்வெல்ட் மறைந்து அப்பொழுதுதான் ஹாரி ட்ரூமேன் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றிருந்தார். சர்ச்சிலின் ஆளுமைக்கு அருகே ட்ரூமேனின் ஆளுமை ஒன்றுமே இல்லை என்ற உண்மை, அந்த நேரம் சர்ச்சிலுக்கு சாதகமாக அமைய வழிவகுத்தது. எனவே சர்ச்சில் தன் ஆளுமையைப் பயன்படுத்தி சக பெரிய சக்தியான அமெரிக்காவின் அதிபர் ட்ரூமேனைத் தன் வழிக்கு எளிதில் கொண்டுவந்தார். தீர்மானங்கள் மளமளவென்று இயற்றப்பட்டன. ஒரு கட்டத்தில் ‘தன்னாட்சி’ என்ற வார்த்தையை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும்படி சர்ச்சில் செய்தவுடன் மாநாட்டில் பிரிட்டனின் கை ஓங்க ஆரம்பித்தது. இறுதியாக ஐக்கிய நாடுகள் பத்திரத்தின் நாட்டுரிமம் தொடர்பான(11 மற்றும் 12-ம் அத்தியாயங்கள்) கொள்கைகளும் அமைப்புகளும் பிரிட்டனின் விருப்பத்தின்படி கட்டமைக்கப்பட்டன. ‘தன்னாட்சி’ என்ற வார்த்தை அதிகாரப்பூர்வமாகப் பத்திரத்தில் சேர்க்கப்பட்டது. உச்சக்கட்டமாக, ”ஐக்கிய நாடுகள் சபையால் அதன் கொள்கைகளையும் விதிகளையும் உலகின் சக்திகளின் மீது திணிக்க முடியாது. அப்படி கொள்கைகளையும் விதிகளையும் அந்த நாடுகள் மீறும் பட்சத்தில், அதிலோ, அந்த நாடுகளில் அதனால் விளைந்த மற்ற விவகாரங்களிலோ தலையிட முடியாது.”, என்று பதியப்பட்டது. எல்லாம் முடிந்திருந்தது. சர்ச்சில் வெற்றி வெற்றிருந்தார்.

          மாநாடு முடிந்த சில தினங்களுக்குப் பின் சிகாகோவில் ஒரு கூட்டத்தில் விஜயலட்சுமி பேசினார். அவர் குரலில் ஏமாற்றம் தொனித்தது. “சான்ஃபிரான்சிஸ்கோ மாநாடு எனக்கு ஏமாற்றத்தையே தருகிறது. ஆசியாவைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் சுதந்திரத்தை எதிர்ப்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள், அது இந்த மாநாட்டினால் சாத்தியப்படும் என்று தோன்றவில்லை. இந்த மாநாடு ஏன் உலக சக்திகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நேர்மையான மாநாடாக நடந்திருக்க முடியாது என்று எனக்கு சத்தியமாகப் புரியவில்லை. நம்முடைய தலைவர்களும் அரசியல்வாதிகளும் சில அடிப்படை உண்மைகள் பற்றி நன்றாக வாய் கிழியப் பேச மட்டும்தான் செய்கிறார்கள். ஆனால் அவற்றை செயலாக்க, நிஜமாக்க யாருமே முயல்வதில்லை.”, என்று ஆதங்கப்பட்டார்.

          அப்பொழுது இந்தியாவில் நேரு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்த போதே விஜயலட்சுமிக்கும் அவருக்கும் கடிதப் போக்குவரத்து இருந்தது. அதனால் என்ன நிலவரம் என்பதை நேரு நன்றாக அறிந்து வைத்திருந்தார். “நாம் அனைவருமே இந்தத் தருணத்தில் ஒரு வகையில் சர்வதேசியவாதிகள்தான். என்ன, ஒவ்வொருவரும் சர்வதேசியத்தை ஒவ்வொரு அர்த்தத்தில் நமக்கேற்றாற்போல் எடுத்துக்கொள்கிறோம். இந்தியாவுக்குத் தற்போது இருக்கும் பிரச்னைகளால் அது உலக அரசியலில் தலையிடுவதென்பது தேவை இல்லாத விஷயமாக சிலர் நினைக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்த வரை மற்ற நாடுகளை விட இந்தியாவில்தான் நாம் முன்வைக்கும் சர்வதேசியம் பொருந்துவதற்கான சூழல் நிறைய இருக்கிறது. தற்போதைய சிக்கல்கள் தீர்ந்தவுடன் நம்மால் புதிய இந்தியாவை சர்வதேசியத்துடனும் பன்முகத்தன்மையுடனும் கட்டமைக்கமுடியும்.”, என்று நேரு எழுதியிருந்தார். சிறையிலிருந்து எழுதப்பட்ட அந்தக் கடிதங்கள் விஜயலட்சுமிக்குத் தெம்பூட்டின. ஒற்றை ஆளாகப் பல மாதங்கள் ஏகப்பட்ட இடையூறுகளைத் தாண்டி அமெரிக்காவில் விஜயலட்சுமியால் இயங்க முடிந்தது என்றால் அதற்கு காந்தி மற்றும் நேரு அளித்த தன்னம்பிக்கையும் தெம்பும் முக்கியக் காரணம்.

          நேருவின் ஒவ்வொரு கடிதத்திலும் தன்னம்பிக்கை மிளிர்ந்தது. “இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களாலும் உன்னுடைய அமெரிக்கப் பணி பாராட்டுக்குள்ளாகியிருக்கிறது. உன்னுடைய இடத்தில் வேறொருவர் இருந்திருந்தால் அவர்களால் நிலைமையை சமாளித்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். உன்னுடைய பணிகள் வெகு சீக்கிரத்தில் பலனை தந்துவிடும் என்று எதிர்ப்பார்க்க முடியாவிட்டாலும் தொலை நோக்கில் உன் பணிகள் குறிப்பிடத்தக்க மாற்றங்களை நிச்சயம் ஏற்படுத்தும்.”, என்று ஒரு கடிதத்தில் எழுதியிருந்தார் நேரு. அவரது வார்த்தைகள் விஜயலட்சுமியின் மனத்தை ஒருமுகப்படுத்தியது. முழு வெற்றி கிடைக்காவிட்டாலும் தன் முழு உழைப்பையும் ஒரு குறிப்பிட்ட திசையில் செலுத்த அவை உதவின.

          அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமேனை வெள்ளை மாளிகையில் விஜயலட்சுமி சந்தித்தார். அப்பொழுது பிரிட்டனின் புதிய பிரதமராக க்ளெமெண்ட் அட்லீ தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஒரு பக்கம் அமெரிக்கா பிரிட்டனுக்கு ஆயுத உதவி செய்துக்கொண்டே எப்படி இந்தியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க முடியும் என்று ஆரம்பத்திலிருந்தே விஜயலட்சுமிக்குக் கேள்வி இருந்தது. அமெரிக்க ஆயுதங்களை பிரிட்டன் பயன்படுத்துவதில் அமெரிக்கா கெடுபிடிகள் விதிக்கக்கூடாது என்று வேறு அட்லீ சொல்லியிருந்தார். ஒரு கணம் ஆரம்பித்த இடத்திற்கே திரும்பி வந்தது போன்ற உணர்வு விஜயலட்சுமிக்கு எழுந்தது. அந்த ஆதங்கத்தை ஒரு கூட்டத்தில் வெளிப்படுத்தினார். அமெரிக்கா சான் ஃப்ரான்சிஸ்கோ மாநாட்டில் தன் சார்பாகப் பேசவில்லை என்ற வருத்தமும் இருந்தது. முதல் முறையாக அமெரிக்காவை நேரடியாக அந்தக் கூட்டத்தில் குற்றம் சாட்டினார். “காலனியாதிக்க சக்திகள் ஆசியாவின் சுதந்திரப் போராட்டங்களை ஒடுக்க அமெரிக்க ஆயுதங்களையே பயன்படுத்துகின்றன. எனவே இன்று ஆசியாவில் நடக்கும் அநீதிகளுக்கு அமெரிக்காவிற்கும் தார்மீகப் பொறுப்பு இருக்கிறது.”, என்றார்.

          தன் அமெரிக்கப் பயணம் முடிவுக்கு வந்த வேளையில் இறுதியாக ஒரு கூட்டத்தில் தன் பயணத்தின் நோக்கங்கள் குறித்தும் அதன் வெற்றி தோல்விகள் குறித்தும் சுருக்கமாகக் கூறினார். “அமெரிக்காவும் இந்தியாவும் ஒரே கொள்கைகளையும் இலட்சியங்களையும் பகிர்ந்துக்கொண்டிருக்கும் நாடுகள். நீங்கள் உலகத்தின் உச்சியில் இருக்கிறீர்கள். போரில் வெற்றி பெற்றுவிட்டீர்கள். உங்களிடம்தான் பணம் இருக்கிறது. எனவே உங்களால் ஒரு உலகளாவிய மாற்றத்தை எளிதில் ஏற்படுத்த முடியும். என்னுடைய பணி ஒன்றே ஒன்றுதான். சுதந்திரம் என்பது அனைவருக்குமானதா அல்லது அது சில சக்தி வாய்ந்த குழுக்களுக்கு மட்டும் சொந்தமானதா என்பதை அமெரிக்க மக்களின் மனசாட்சியிடம் கேட்பது மட்டுமே என் பணி. நம்மிடம் இருப்பதை நம் அண்டை நாடுகளுக்குத் தரும் பண்பை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.”, என்று தன் உரையை முடித்துக்கொண்டார். விமானம் ஏறினார்.

          பத்தாயிரம் பேர் சூழ கராச்சியில் நேரு அவரை வரவேற்றார். “மகிழ்ச்சியான நினைவுகளுடன் நான் நாடு திரும்பியுள்ளேன். அமெரிக்க மக்கள் நம்முடைய சுதந்திரப் போராட்டத்தில் நமக்குத் துணையாக நிற்பார்கள் என்ற நம்பிக்கையை இந்தப் பயணம் ஏற்படுத்தியுள்ளது”, என்று பேட்டியளித்தார். மேலும், “நம்முடைய சுதந்திரத்தை நான் அமெரிக்காவில் வலியுறுத்தக் காரணம் அது இந்தியாவின் உரிமை என்பதால் மட்டுமல்ல. இந்தியாவின் சுதந்திரம் உலக அமைதியின் கட்டமைப்பில் மையப்புள்ளியாக முக்கியப் பங்காற்றும் என்பதாலும்தான்.”, என்றார்.

(தொடரும்)

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

நவீன இந்தியாவின் சிற்பி

இந்தியாவும் இந்தியும்