Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

கடவுள்களும் குருமார்களும் - குஷ்வந்த் சிங்

          மறைந்த குஷ்வந்த் சிங்கின் ‘Gods and Godmen of India' நூலை வாசித்து முடித்தேன். கடவுள், மதம், மூடநம்பிக்கை, ஆன்மிக இயக்கங்கள், சாமியார்கள் குறித்த குஷ்வந்தின் கருத்துகள், அனுபவங்கள், விமர்சனங்கள் ஆகியவற்றின் தெளிவான தொகுப்பு இது. கடவுள் மற்றும் ஆன்மிகம் குறித்த குஷ்வந்தின் நிலைப்பாடு எவ்வாறு உருவாயிற்று என்பதை 62 கட்டுரைகளில் குஷ்வந்த் சிங்கிற்கே உரிய நகைச்சுவை எழுத்தின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. குஷ்வந்த் சிங் ஒரு ‘அக்னாஸ்டிக்’ என்பது அனைவருக்கும் தெரியும். அதாவது கடவுள் இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத, ஆனால் கடவுள் இல்லவே இல்லை என்று அறுதியிட்டுச் சொல்லவும் முடியாத, தானே உணரும் வரை கடவுள் இல்லைதான் என்ற நிலைப்பாடு கொண்டவர்கள். ஒருவகையில் இது கொஞ்சம் அவஸ்தையான நிலைப்பாடும் கூட. கடவுள், பிறவிப்பயன், மரணம் குறித்த கேள்விகள் மனதின் ஓரத்தில் உறுத்திக்கொண்டே இருக்கும்.

          மதம், மத அமைப்பு, மதம் சார்ந்த அரசியல் போன்றவற்றில் குஷ்வந்த் பல்வேறு சிக்கல்களைப் பார்க்கிறார். ஒவ்வொரு மதத்திலும் இரண்டு வகையான குழுவினர் இருக்கிறார்கள். ஒரு சாரார் மாற்று மதத்தினரோடு இணக்கமாக, விட்டுக்கொடுத்து செல்லும் மனப்பான்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள். மற்றொரு சாரார் தங்களின் மதம்தான் உயர்வானது என்றும் தனித்துவமானது என்றும் எண்ணுகிறார்கள். முதல் சாரார் அமைதி விரும்பிகளாக இருப்பதாலும், மற்றொரு சாரார் சகிப்புத்தன்மையற்ற அடிப்படைவாதிகளாக ஆக்ரோஷமாக இயங்குவதாலும் இரண்டாம் சாராரின் குரலே ஓங்கி ஒலிக்கின்றன. அதனால் அவர்கள்தான் மக்களின் கருத்தை உண்மையாகப் பிரதிபலிக்கிறார்கள் என்ற பிம்பம் ஏற்படுகிறது. ஆனால் இது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது என்கிறார். தாங்கள்தான் மதத்தின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்தக் கூட்டத்தின் மிரட்டல்களுக்கெல்லாம் ஒரு மதச்சார்பற்ற அரசு பணிந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கிறார்.

          இந்தியர்கள் கடவுளை எப்படிப் பார்க்கிறார்கள் என்று அறிந்துகொள்வதில் குஷ்வந்த் சிங்கிற்கு அதிகமான ஆர்வம் இருந்திருக்கிறது. ‘நீங்கள் எந்த விஷயத்தைப் பற்றி அதிகம் விரும்பி ஆர்வத்துடன் பேசுவீர்கள்?’ என்று குஷ்வந்த் பொதுவெளியில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியிருக்கிறார். அதில் நான்கு விஷயங்கள் துருத்திக்கொண்டு முன்னணி வகித்தன. கடவுள், பணம், அரசியல், செக்ஸ், இந்த நான்கிலும் இந்தியர்கள் தீராத ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொன்று முக்கியத்துவம் பெறும். ஏதாவது துர்நிகழ்வோ துன்பமோ நேர்ந்தால் அப்பொழுது கடவுளுக்கு மவுசு கூடும். எந்தப் பிரச்னையும் இல்லாத அமைதியான காலகட்டத்தில் பணம் கடவுளை பின்னுக்குத் தள்ளிவிடும். அரசியல் பேசுவதென்பது ஒரு போதை. தேர்தல் நேரத்தில் கடவுளையும் பணத்தையும் தள்ளிவிட்டுவிட்டு அது முதலிடம் பிடித்துவிடும். செக்ஸ் பெரிதாகப் பொதுவெளியில் விவாதிக்கப்படுவதில்லை என்றாலும் அப்படி இப்படி பாலியல் ரீதியான பேச்சுகள் வந்துவிடும். அதுவும் முக்கால்வாசி இந்தியர்களுக்கு சுதந்திரமாக விரும்பியவர்களுடன் விருப்பப்பட்டு செக்ஸ் வைத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைப்பதில்லை. காலிடுக்கில் நடக்கும் செக்ஸை விட கற்பனையில்தான் அதிகமாக செக்ஸ் நடக்கிறது. எனவே செயலில் காட்டுவதை விட செக்ஸ் குறித்து இலைமறை காயாக பேசியே இந்தியர்கள் தங்களை சாந்தப்படுத்திக் கொள்கிறார்கள் என்கிறார்.

          இந்தக் கருத்துக் கணிப்பின் மூலம் குஷ்வந்த் சிங்கிற்கு ஒரு விஷயம் புலப்படுகிறது. அதாவது எந்தப் பேச்சு வந்தாலும் பெரும்பாலான இந்தியர்கள் அதைத் தங்களோடு தொடர்புபடுத்திப் பார்க்கிறார்கள். கடவுளையோ மதத்தையோ குறித்து பேசும்போது அவர்களின் கருத்துகள் தங்களின் மத நம்பிக்கை குறித்த பெருமிதமாகவோ, அல்லது மாற்றார் குறித்த கீழான பார்வையாகவோ வெளிப்படுகின்றன. பணம் குறித்து பேச்சு வந்தால், எப்படி இவ்வளவு சம்பாதித்தேன் என்று தன் திறமையை மெச்சிக்கொள்கிறார்கள், அல்லது அடுத்தவர்கள் எப்படியெல்லாம் ஏமாற்று வேலைகள் செய்து பணத்தை ஈட்டியிருப்பார்கள் என்று புறம் பேசுகிறார்கள். அரசியல் என்று வந்துவிட்டால், அது ஒரு சாக்கடை என்றும் அதனால் அது தங்களைப் போன்ற நல்லவர்களை ஈர்ப்பதில்லை என்றும் சொல்கிறார்கள். செக்ஸ் விவகாரம் என்று வந்தால் அடுத்தவரைக் கிழித்துத் தொங்கவிடுகிறார்கள், ஆனால் வாய்ப்பு கிடைத்தால் தான் இதைவிட நன்றாகவே செயல்பட்டிருப்பேன், என்று ஆழ்மனதில் தோன்றுவதை வெளிப்படுத்த மறுக்கிறார்கள். இங்கு எல்லாமே ‘நான் மேலானவன்’ என்பதாகவே இருக்கிறது, என்று கருத்து கொள்கிறார்.

          மதங்களும் அந்த மதங்களை சார்ந்தவர்களும் சமூகத்தால் மதிப்பிடப்படும் முறையில் குஷ்வந்திற்கு மாற்றுக்கருத்து இருக்கிறது. அந்த மதங்களைத் தோற்றுவித்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை வைத்து அந்த மதத்தை மதிப்பிடக் கூடாது. அந்த மதத்தையும் அதன் கருத்துகளையும் பின்பற்றுபவர்களின் நடத்தையை வைத்தே அவை மதிப்பிடப்படவேண்டும். மதத்தின் தோற்றுவாய்களைப் பந்தயக் குதிரை போல் நடத்தி இவர் வெல்லவேண்டும், இவர் வெல்ல வேண்டும் என்று அவர்களின் மீது ஒழுக்க பிம்பங்களைக் கட்டமைக்கிறோம். இது தட்டையானது. யார் உயர்ந்தவர்கள், ராமரா, மகாவீரரா, புத்தரா, முகம்மதா, கிறித்துவா, நானக்கா என்பது முக்கியமே இல்லை. அவர்கள் அனைவரும் சமமானவர்களாகக் கூட இருக்கலாம், அதுவல்ல விஷயம். இந்து, இஸ்லாம், கிறித்துவம், புத்தம், சமணம், சீக்கியம் இவற்றுள் எந்த மதம் அதிகப்படியான நேர்மையாளர்களை, மனதைரியம் கொண்டவர்களை இந்த சமூகத்திற்காக உருவாக்குகிறது என்பதைப் பொறுத்தே அவற்றை மதிப்பிட வேண்டும். மதக் கோட்பாட்டுகளின் சிறப்புகளைவிட, அவை எந்த வகையான விளைவுகளை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை வைத்தே அவற்றை நான் மதிப்பிடுவேன் என்கிறார்.

          கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி யோசிப்பவர்களுக்கு குஷ்வந்த் சிங் சொல்கிறார், “உங்கள் வியர்வையால் விளைந்தவை அனைத்தும் உங்களின் முறையான சொத்து; வாரிசு என்ற முறையில் அடுத்தவர் சம்பாதித்த சொத்து உங்களை வந்தடைந்தாலோ, குருட்டு அதிர்ஷ்டத்தில் தற்செயலாக காசு கிடைத்தாலோ அது முறையற்றது. இதைத்தானே ஹலால், ஹராம் என்று வகைப்படுத்துகிறார்கள்? இதை இக்பால் சொன்னால் என்ன கீதை சொன்னால் என்ன? எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் நோக்கம் உயர்வானது, தர்மத்திற்குக் கட்டுப்பட்டது என்ற உறுதியான எண்ணம் உங்களுக்கு ஏற்படுமாயின், விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், அஞ்சாமல் அப்பணியைத் தொடருங்கள். இதில் கடவுள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன, நேரத்தை வீணடிக்காமல் போய் வேலையைப் பாருங்கள்.”

          ஒரு கருத்தரங்கில் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜாஃபர் ஃபதேஹல்லி முன்வைத்த கருத்து ஒன்று குஷ்வந்தை வெகுவாக ஈர்த்திருக்கிறது. வருங்காலத்தில் மதத்தில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச்சூழல் சார்ந்தவையாக இருக்கவேண்டும், என்கிறார். மேலும் மேலும் காடுகளை அழித்துக்கொண்டும், நதிகளில் குப்பைகளைக் கொட்டிக்கொண்டும், காற்றை மாசுபடுத்திக்கொண்டும் எந்தக் கடவுளை நாம் அடைய நினைக்கிறோம்? நமக்குக் கடவுளால் கொடுக்கப்பட்டது என்று நம்பப்படும் வளங்களையே நாம் அழித்தால், நம்மை நாமே அழித்துக்கொள்வதிலிருந்து எந்த கோவிலும், மந்திரமும், பூஜையும் நம்மைக் காப்பாற்றப் போவதில்லை, என்று விமர்சிக்கிறார்.

          அந்தக் கருத்தரங்கில் தங்கம் ஜேக்கப் என்ற இளம்பெண் கிறித்துவத்தில் அதிகம் நாட்டமுடையவராக தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். தேனீர் இடைவேளையில் குஷ்வந்த் அவரிடம் சென்று, “உங்களைப் போன்ற ஒரு அழகான இளம் பெண் எவ்வாறு மதத்தின் பிடியில் மாட்டிக்கொண்டார்?”, என்று மறைமுகமாக மதத்தை சீண்ட, இடைவேளைக்கு பிறகு அவர் இதை சபையில் குறிப்பிட்டு குஷ்வந்தின் மானத்தை வாங்கிவிட்டார். “குஷ்வந்த் இவ்வாறு கேட்டார். அதற்கு என்னுடைய பதில், நான் இளமையாகவும் அழகாகவும் இருப்பதற்கான காரணம் என் மதம் என்னை அவ்வாறு ஆக்கிவிட்டதுதான்.”

          பகுத்தறிவாளர் ஏ.டி.கோவூரின் வாதங்களும் குஷ்வந்தை ஈர்த்திருக்கின்றன. ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, சாமியார்களின் ஏமாற்று வேலைகளை அம்பலப்படுத்துவதையே தன் முழு பணியாக மேற்கொண்டவர் அவர். “கடவுள் எப்படிப்பட்டவர் என்பதே தெரியாமல் எப்படி கடவுள் உயர்வானவர் என்ற முடிவுக்கு வர முடியும்? கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது அல்ல இங்கு பிரச்னை. கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சாமியார்கள் இன்னும் ஆபத்தானவர்கள். காற்றிலிருந்து கைக்கடிகாரம், தங்க சங்கிலி, மோதிரங்களையெல்லாம் வரவழைக்கிறார்கள். கடவுளே இப்படியெல்லாம் நேரில் வந்து மேஜிக் வித்தை காட்டவில்லை, இவர்கள் காட்டுகிறார்களாம்.”

          நம் நாட்டைப் போல் அதிகப்படியான கடவுள்களை வேறெந்த நாடும் உருவாக்கவில்லையே என்று குஷ்வந்திற்கு வெகுநாட்களாக எண்ணம். அவர் எண்ணத்திற்கு ஏற்றவாறு அவர் நண்பர் அரவிந்த் குமாரும் அவர் மனைவி குசும்மும் இந்தியக் கடவுள்களின் பெயர்களைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டார்கள். அதில் பார்த்தால் சிவனுக்கு மொத்தம் 3,411 பெயர்கள். விஷ்ணுவுக்கு 1,676 பெயர்கள். இந்திரன் 451 பெயர்களில் அழைக்கப்படுகிறார், கிருஷ்ணா 441, காமதேவன் 287, முருகன் 161, விநாயகர் 141, ராமர் 129 என்று பலப்பல பெயர்கள். பார்வதி, துர்க்கை, காளி என்று 900 பெயர்கள்; லஷ்மிக்கு 191 பெயர்கள், சரஸ்வதிக்கு 108, சீதைக்கு 65, ராதைக்கு 35 என்று அடுக்கிக்கொண்டே செல்கிறது. அந்த புத்தகத்தைப் பற்றி குஷ்வந்த் இவ்வாறு சொல்கிறார், “இந்திய புராணக் கதை மாந்தர்களை இந்தப் புத்தகம் ஆவணப்படுத்தியிருக்கிறது என்பதைத் தாண்டி,  இதற்கு வேறு ஒரு பயனும் இருக்கிறது. தங்களின் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது, என்று யோசித்துக் கொண்டிருப்பவர்கள் இந்தப் புத்தகத்தை ஒரு புரட்டு புரட்டலாம்.”

          அனைத்து மதங்களுமே அந்த காலகட்டத்தில் நிலவிய சமூகப் பிரச்னைகளை எதிர்கொள்வதற்காக உருவாக்கப்பட்டவையே, என்கிறார் குஷ்வந்த். அதாவது உலகில் மக்கள்தொகை குறைவாக இருந்தபோது அதிகமாகப் பிள்ளை பெற்றுக்கொள்ளுங்கள் என்று போதிக்கப்பட்டது. போர்களால் ஆண்களின் எண்ணிக்கை குறைந்தபோது பலதார மணம் ஊக்குவிக்கப்பட்டது. இந்தியாவில் வளங்களுக்குப் பஞ்சமில்லாத காலகட்டங்களில் பிரார்த்தனை, தியானங்கள் போன்றவற்றை சாதுக்களால் செய்ய முடிந்தது. உழைக்கும் மக்கள் தானமளித்தார்கள். ஆனால் இவை எல்லாம் அந்தக் காலம். இன்று நாம் சந்திக்கும் பிரச்னைகள் வேறு வகைகளானவை. மனிதர்களின் எண்ணிக்கை பெருகியதால் நெருக்கடியடித்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறோம்; கணிசமானவர்கள் பிச்சையெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள் மனசாட்சி உறுத்தாமல் சன்னியாசத்தை மேற்கொள்வது எந்த வகையில் நியாயமாகும்? அதை நிகழ்காலத்தில் மதங்கள் எப்படி அங்கீகரிக்கலாம்? காலத்திற்கு ஏற்றார்போல்  நாம் புதிய அறக்கோட்பாடுகளை உருவாக்க வேண்டும், நம் நிகழ்கால சிக்கல்களை எதிர்கொள்ள மதங்கள் தங்களை மீட்டுருவாக்கம் செய்யவேண்டும், என்கிறார். அப்படி புதுப்பிக்கப்படும் மதமானது உழைப்பை ஊக்குவிப்பதாக இருக்கவேண்டும்; அடுத்தவர் உழைப்பில் வாழ்ந்துகொண்டிருக்கும் யோகிகளையும் சாமியார்களையும் ஊக்குவிக்கக்கூடாது. மதம் சார்ந்த விடுமுறை தினங்களைக் குறைத்து, அதிகமாக உழைப்பதை ஊக்குவிக்க வேண்டும், என்கிறார்.

          அதோடு நில்லாமல், அந்த மதத்தில் திருமணம் நடைபெறும்போது, மணமக்கள் இருவரும் கடவுளின் சாட்சியாக ‘ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள மாட்டேன், குழந்தை பெற்றபிறகு குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்வேன்', என்று உறுதிமொழி அளிக்க வேண்டும். நம் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் சட்டம் பெரிதளவில் வெற்றியடையவில்லை. அதை மதம் மூலமாக சாத்தியப்படுத்தினால்தான் நல்ல பலன் கிடைக்கும்போல, என்கிறார். இறந்தவரைத் தகனம் செய்வதில் ஏராளமான மரக்கட்டைகள் வீணாகின்றன. அண்ணாவும் எம்.ஜி.ஆரும் புதைக்கப்பட்டார்கள், அதுபோல் செய்யலாம். கடலோர நகரம் என்றால் உடலில் கல்லைக் கட்டி கடலில் முழுக்கலாம். மரம் வளர்ப்பை மதக் கடமையாகவும் கல்வி முறையின் அங்கமாகவும் சேர்க்கவேண்டும். மரம் நட்டு வளர்த்தேன் என்று ஆதாரம் காட்டினால்தான் பள்ளி, கல்லூரி சான்றிதழ் கிடைக்கும் என்ற முறையைக் கொண்டு வரலாம், இது போன்றவைதான் இன்றைய மதங்களின் நோக்கமாக மாற வேண்டும், என்கிறார். அதே நேரத்தில் எது பாவம் என்று வரையறுப்பதில் மதங்கள் கடுமை காட்டவும் கூடாது என்கிறார். உதாரணத்திற்கு ஒரு சீக்கியருக்கு முகவாயில் அடிபட்டு மருத்துவனையில் சேர்க்கப்படுகிறார். மருத்துவர் அவரின் தாடியை எடுக்கவேண்டும், இல்லையேல் ஒழுங்காக மருத்துவம் பார்க்க முடியாது என்று எச்சரிக்கிறார். அப்பொழுது எது பாவம், தவறு என்று யார் முடிவு செய்வது? மத நம்பிக்கையைப் பின்பற்றுவதா, அல்லது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதா என்பதை மதம் தீர்மானிக்காமல், அதை அந்த மனிதரின் முடிவுக்கே விட்டுவிட வேண்டும், என்கிறார்.

          இந்தியன் எக்ஸ்பிரசில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அவருக்கு ராஜ்மோகன் காந்தியின் மகள் சுப்ரியாவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அப்பொழுது அவருக்கு பத்து வயது. “அங்கிள் உங்கள் கட்டுரையை வாசித்தேன். கடவுளை நம்ப மாட்டேன் என்று சொல்கிறீர்கள்? அது தவறு. கடவுள் இருக்கிறார். தினமும் எங்கள் தோட்டத்திற்கு வந்து என்னிடமும் அம்மா-அப்பாவிடமும் பேசுகிறார். எனவே அவர் இருக்கிறார்”, என்று அதில் எழுதியிருந்தது. ஒரு சிறுமியின் இறை நம்பிக்கையைக் கண்டு குஷ்வந்திற்கு ஒரே ஆச்சரியம். பதில் கடிதமொன்றை எழுதினார், “கடவுள் உன் வீட்டிற்கு தினமும் வந்து உன்னிடமும் உன் அம்மா-அப்பாவிடமும் பேசுகிறார் என்று சொல்கிறாய், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருடைய தொலைபேசி எண்ணை எனக்கு அனுப்ப முடியுமா? அவரிடம் நான் பேசவேண்டும்”. இதற்கு சுப்ரியாவிடமிருந்து பதிலேதும் வரவில்லை. அதன் பிறகு ஐந்தாண்டுகள் கழித்து குஷ்வந்த் ராஜ்மோகனை சந்தித்தபோது இதுகுறித்து கேட்டிருக்கிறார். “இப்பொழுதெல்லாம் அவள் கடவுளோடு பேசுதை நிறுத்திவிட்டாள். அக்னாஸ்டிக்காக மாறிவிட்டாள்”, என்று சோகத்துடன் கூறியிருக்கிறார்.

          கடவுள் எங்கே என்று கேட்டால் யாராவது, ‘உனக்குள்ளே தேடு’ என்று சொன்னால் குஷ்வந்த் கடுப்பாகிவிடுவார். என்னுள்ளே எப்படிப் பார்ப்பது என்று எனக்குத் தெரியவில்லை, அதனால் என்னால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சும்மா உள்ளே பார் உள்ளே பார் என்று சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்காதீர்கள், என்கிறார். பல்வேறு காரணங்களால் அவருக்கு ஓஷோ ரஜ்னீஷைப் பிடிக்கிறது. ஓஷோவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டுகிறார், “முட்டாள் உலகம்! இஸ்லாமியர்கள் அவர்களுக்குப் புரியாத அரபியில் தொழுகிறார்கள்; இந்துக்கள் அவர்களுக்குப் புரியாத சமஸ்கிருதத்தில் பூஜை செய்கிறார்கள்; இப்பொழுது இவர்களோடு புத்தர்களும் சேர்ந்துகொண்டு அவர்களுக்குப் புரியாத பாலி மொழியில் வழிபடுகிறார்கள். ஏன் செத்துப்போன மொழிகளில்தான் வழிபட வேண்டும் என்று மதகுருக்கள் வலியுறுத்தியபடி இருக்கிறார்கள்? ஏனென்றால் அவை உங்களுக்குப் புரியாமல் இருக்கும்வரைதான் அவற்றிற்கு மதிப்பு. புரிந்துவிட்டால் அதன் மர்மம் வெளிப்பட்டுவிடும்; இதை சொல்லி வழிபட என்ன இருக்கிறது என்று தோன்றிவிடும். எதோ புரியாத ஒன்றை முணுமுணுக்கிறீர்கள், என்ன வகையான பிரார்த்தனை அது? யாரிடம் அதை சொல்கிறீர்கள்? அவை உங்கள் இதயத்திலிருந்து வரவில்லை; மாறாக வெறும் கிராமஃபோன் ரிக்கார்டாகத்தான் நீங்கள் இருக்கிறீர்கள்”. குஷ்வந்த் சிங்கைப் பொறுத்தவரை பிரார்த்தனை என்பது கடவுள் நோக்கியதாக இருந்தாலும் உண்மையில் அது சுயத்துடனான உரையாடல் ஆகும். திருடுவதற்கு முன்பு திருடர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்;  வெற்றி எங்கள் வசமாகட்டும் என்று போர்வீரர்கள் வேண்டுகிறார்கள், போரில் வெற்றி என்பது இரண்டில் ஒரு பக்கம்தான் இருக்கப்போகிறது, பலர் சாகத்தான் போகிறார்கள்.

          குஷ்வந்த் சிங்கைப் போல் மதகுருமார்களையும் சாதுக்களையும் தேடித் தேடி சந்தித்த அக்னாஸ்டிக் பத்திரிகையாளர்கள் இந்தியாவில் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். சாய்பாபா, தீரேந்திரர், ரஜ்னீஷ், தலாய் லாமா, தாதாஜி, ஷ்ரத்த மாதா, மாதா நிர்மலா தேவி, போலா நாத், தத்தா பால், முக்தாநந்தா, என்று வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் அவர்களிடம் தொடர்ச்சியாக உரையாடல்களை மேற்கொண்டிருக்கிறார். தலாய் லாமாவிடம் நிகழ்த்திய ஒன்றரை மணி நேர நேர்காணல் அலாதியானது. வாரிசு முறை இல்லாமல் யார் வேண்டுமானாலும் தலாய் லாமாவாகத் தேர்வு செய்யப்படலாம்; சிறுவயதிலேயே தேர்வு செய்யப்பட்டு, பயிற்சிகள் கொடுக்கப்பட்டு, கற்றுத்தேர்ந்ததும் பொறுப்புகள் அளிக்கப்படும் முறை என்பது குஷ்வந்தைப் பொறுத்தவரை மற்ற மத அமைப்புகளைக் காட்டிலும் மேம்பட்டதாகவே இருக்கிறது. தாதாஜியுடனான உரையாடல்களில் அவருடன் குஷ்வந்த் முரண்பட்ட புள்ளிகள் ரொம்பவே குறைவு. அவருடனான அனுபவம் குறித்த குஷ்வந்த் சிங்கின் பதிவு சுவாரசியமானது: “சுற்றி வளைக்காமல் அவரிடம், “தாதாஜி, சாவைக் குறித்து ஏன் மக்கள் அனைவரும் பயப்படுகிறார்கள்?”, என்று கேட்டேன். நான் என்னைப் பற்றித்தான் கேட்கிறேன் என்பதை அவர் உடனே புரிந்துகொண்டு என்னைக் கலக்கத்துடன் பார்த்து, “உடம்பு எதுவும் சரியில்லையா?”, என்று கேட்டார். “உடம்பா? அது மிக மிக ஆரோக்கியமாக இருக்கிறது. என் மனதுதான் சாவைப் பற்றிய நினைவாகவே சுற்றிக்கொண்டிருக்கிறது. இந்த தொல்லையிலிருந்து என்னைக் காப்பாற்றுங்களேன்”, என்று கெஞ்சினேன். சட்டென்று எதிர்பாராத விதமாக என் தோள்களைப் பிடித்து ஒரு குலுக்கு குலுக்கி தன்னருகே இழுத்தார். தன் விரல்களால் முதுகுத்தண்டை விரவி அப்படியே என் தாடிக்கு விரல்களைக் கொண்டுவந்தார். திடீரென்று என் உடல் ஒரு சிலிர்ப்பு சிலிர்த்தது. ஆயிரம் ஊதுவத்திகளின் வாசம் என்னை சூழ்ந்துகொண்டது. ஒருவிதமான பரவசத்தில் ஆழ்ந்த என்னிடம், “இந்த நொடியிலிருந்து சாவைப் பற்றி நீ நினைக்க மாட்டாய்”, என்று அதிகாரத்துடன் கட்டளையிட்டார். நான் ஒன்றும் பேசாமல் தலையாட்டிவிட்டு விழுந்து வணங்கி விடைபெற்றேன். மரணம் குறித்த நினைப்பு அன்று மாலையிலிருந்து அடியோடு நின்றுவிட்டது”, என்கிறார். அதேபோல் ரஜ்னீஷுடனான ஒரே ஒரு சந்திப்பிலும் உரையாடல் மரணம் தொடர்பாகவே இருந்திருக்கிறது.

          இதுபோன்ற அனுபவங்கள் அவருக்குக் கிட்டியிருந்தாலும், கடவுள் இருக்கிறார் என்னும் வாதத்தை குஷ்வந்த் சிங்கால் ஏற்றுக்கொள்ளவே முடிந்ததில்லை. ஆத்திகத்தின் தத்துவம் எளிமையானது. ‘எல்லாவற்றிற்கும் காரணங்களும் அதற்கான விளைவுகளும் இருக்கின்றன, எனவே நாம் படைக்கப்பட்டதற்குக் கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கிறது. காரணம் இருக்கிறது என்றால் காரணகர்த்தாவும் நிச்சயமாக இருக்கவேண்டும். எனவே கடவுள் இருக்கிறார்’. குஷ்வந்த் சிங்கிற்கு இந்த வாதம் போதுமானதாக இல்லை. அப்படியென்றால் காரணகர்த்தாவிற்கும் ஒரு காரணம் இருக்கவேண்டுமே? காரண-விளைவு தத்துவத்தில் இவ்வளவு பிடிப்புள்ள ஆத்திகம் கடவுளை யாரும் படைக்கவில்லை, அவர் ஆதியந்தம் இல்லாதவர் என்று எப்படி சொல்கிறது? “எப்பொழுதெல்லாம் நான் ஆன்மிகத் தேடலுக்குள் நுழையத் துவங்குகிறேனோ அப்பொழுதெல்லாம் என்னைச் சுற்றிய நிகழ்வுகள் என்னை மீண்டும் யதார்த்த உலகிற்குக் கொண்டுவந்துவிடுகின்றன”, என்று கடவுளைப் பற்றிக் கவலைப்படாமல் துன்பப்படும் மனிதர்களைப் பற்றிக் கவலை கொள்ளுங்கள் என்கிறார். ஆனாலும் மக்கள் விடாப்பிடியாக குருமார்களை நாடிச் செல்லும்போது அவர்களைப் புரிந்துகொள்ளவே முயற்சிக்கிறார். “பெரிய பெரிய மருத்துவர்கள், வக்கீல்கள், ஆசிரியர்கள் கூட கிருஷ்ண தத்தாவை நாடிச் செல்கிறார்கள். அவர்களின் உறுதியான நம்பிக்கையை நான் எவ்வாறு கேள்வி கேட்பது?”, என்று கேட்கிறார்.

          இந்த ஆன்மிகத் தொழிலில் இந்தியா பலகாலமாகவே ஈடுபட்டு வருகிறது. வேறெந்த நாட்டைக் காட்டிலும் அதிகமான மதகுருமார்களை இந்தியாதான் உருவாக்குகிறது, என்கிறார். அவர்கள் தொழில் செய்யும் முறை பெரிதாக மாறிவிடவில்லை. முதலில் அவர்கள் இந்தியாவில் தங்களை நிலைநிறுத்திக்கொள்வார்கள், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அயல்நாட்டு சந்தையைப் பிடிக்க முயற்சி செய்வார்கள். சாய்பாபா, முக்தாநந்தா, தாதாஜி போன்றவர்களுக்கு வெளிநாட்டைவிட உள்நாட்டில்தான் மவுசு அதிகம். இதே ரஜ்னீஷ், யோகி பஜன், பாலயோகேஷ்வர் போன்றவர்களுக்கு அயல்நாடுகளில் அதிக கூட்டம் வருகிறது, என்கிறார். அனைத்து ஆன்மிகக் கருத்தரங்கிலும் தனக்கு ஏற்புடைய கருத்துகளை ஏற்றுக்கொள்வார். “அறிவியலுக்குக் கடவுளை நிரூபிக்கும் வேலை கிடையாது. பிரபஞ்சப் பொருட்களை அறிவதே அறிவியல்; கடவுள் பிரபஞ்சத்திற்கும் அப்பாற்பட்டவர்”, என்று கர்னல் போ ஹீ பாக் பேசியதைக் கேட்டுவிட்டு குஷ்வந்த் சிங் இவ்வாறு கூறுகிறார்: “கர்னல் பாக் முன்வைக்கும் கருத்துகள் நம்பும்படியாகவே இருக்கின்றன. ஆனால் அந்த சொற்பொழிவு முடிந்தபோது முன்னெப்போதும் இல்லாத அளவிற்குக் கடவுள் மீது நம்பிக்கையற்றவனாகவே நான் உணர்ந்தேன்.”

          தில்லியின் பணக்கார இரவு விருந்துகளிலும் கோல்ஃப் கிளப்புகளிலும் குஷ்வந்த் சிங்கோடு பழகிய ஒருவர் பின்னாட்களில் சாத்வி ஆனால் எப்படி இருக்கும்? அப்படித்தான் காந்தா அத்வானியை இருவேறு கோலங்களில் குஷ்வந்த் சந்தித்தார். தியானப் பயிற்சிக்காக அவரிடம் சென்றபோது உருத்திராட்ச மாலையுடன் காவி சீலை அணிந்தபடி அவரை வரவேற்றார். முதலில் அவர் மூச்சுப் பயிற்சியைக் கற்றுத்தந்தார். பிறகு மனதிலிருந்து அலைபாயும் எண்ணங்களை நீக்க வேண்டும் என்றார். “முதலில் வெளிச்சத்தை நீக்கவேண்டும், இருட்டான இடம்தான் இதற்கு சரியானது. என் அருகில் உட்கார்ந்துகொள். எனக்குள் இருக்கும் ஆன்மிக அதிர்வுகளை உனக்குள் கடத்தவேண்டும். பயப்படாதே ஒன்றும் செய்யமாட்டேன். என் கையைப் பிடித்துக் கொள், மெதுவாக மூச்சு விடு, மூச்சில் கவனம் செலுத்து, வேறெதையும் நினைக்காதே”, என்றார். குஷ்வந்தும் அவ்வாறே செய்தார். ஆனால் அவர் மனது மட்டும் அமைதியாக இல்லை என்பதை காந்தா கண்டுகொண்டு, “மனதிலிருந்து எண்ணங்களை நீக்கி விடு என்று சொன்னேனே? என்ன உறுத்துகிறது உனக்கு”, என்று கேட்க, அவர் தன் மனதில் இருந்ததை நேர்மையாக சொல்லிவிட்டார். “இல்லை, ஒரு அழகான பெண்ணுடன் இருட்டு அறையில் கைகளைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன். இதை என் மனைவி பார்த்தால் அவளின் ருத்ரதாண்டவத்தை நிறுத்தமுடியாதே,  தியானப் பயிற்சி என்று எத்தனை முறை உண்மையாக மன்றாடினாலும் அவள் அதை நம்பமாட்டாளே, அந்த எண்ணத்தை என்னால் தடுக்க முடியவில்லை”, என்று சொல்ல, காந்தா புன்னகைத்தார். அடுத்தடுத்த வகுப்புகளை காந்தாவின் கணவரும் குஷ்வந்தின் மனைவியும் எளிதில் வர முடியாத இடத்தில் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள்.

          ஹரே கிருஷ்ணா இயக்கம் குறித்த புத்தகம் ஒன்றை வாசித்துவிட்டு, “மிகவும் வருத்தமாக இருக்கிறது”, என்கிறார் குஷ்வந்த். காரணம், ஹரே கிருஷ்ணா இயக்கத்தைப் போலவே மற்ற பிற இயக்கங்களும் ஆரம்பத்தில் சமூகத்தின் பிரச்னைகளைத் தீர்க்கத் துவங்கப்பட்டு, அவற்றின் நிறுவனர் இறந்ததும் திசைமாறிவிடுகின்றன, என்பதுதான். சீடர்களிடையே வேறுபாடு வருவதற்கு அந்த அமைப்புகளில் புழங்கும் பணம்தான் பெரும்பாலும் காரணமாக இருக்கிறது, என்கிறார். சேவை என்ற பெயரில் அன்னை தெரசா மக்களை மதம் மாற்றுகிறார் என்று பூரி சங்கராச்சாரியார் குற்றம் சாட்டியபோது அதை குஷ்வந்த் கடுமையாக விமர்சித்தார். “அன்னை தெரசா வருவதற்கு முன்பாகவே கிழக்கிந்தியாவில் பல பழங்குடியினர் கிறித்துவத்துக்கு மாறிவிட்டனர். கிறித்துவத்தின் பிரிவுகள் குறித்து சங்கராச்சாரியார் அறியவில்லை போலும். அன்னை தெரசா ஒரு கத்தோலிக்க கிறித்துவர், ஆனால் இந்த மாநிலங்களில் பெரும்பாலானோர் பாப்டிஸ்டுகள், மெத்தடிஸ்டுகள், ஆங்லிக்கர்கள் மற்றும் ஏழாம் நாள் அட்வெண்டிஸ்டுகள். சங்கராச்சாரியார் போன்றோர் ஒரு உண்மையை எதிர்கொள்ள மறுக்கிறார்கள். சமூக சேவைக்கான உச்சபட்ச முன்னுதாரணமாக அன்னை தெரசா செயல்பட்டுக்கொண்டிருக்கையில், கிறித்துவ மிஷனரிகளைப் போல் வேறெந்த இந்து, இஸ்லாம், சீக்கிய அமைப்பும் ஆதரவற்றோரிடமும் ஒடுக்கப்படுவோரிடமும் பழகி சேவையாற்றுவதில்லை.”

          தன் வாழ்நாள் முழுவதும் குஷ்வந்த் சிங் மதம், கடவுள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். இதுதான் இப்படித்தான் என்று உறுதியாக ஒரு முடிவிற்கு வர முடியாமல், அனைத்தையும் சாத்தியக்கூறுகளுக்கு உட்படுத்தி பொறுமையுடன் அணுகியிருக்கிறார். தன் கருத்தை யாருக்காகவும் அவர் சமரசம் செய்துகொண்டதில்லை; யார் என்ன நினைப்பார்கள் என்று அஞ்சியதில்லை. ஆனால் தன்னுடைய எழுத்தில் உச்சபட்ச நேர்மையை வெளிப்படுத்தியிருக்கிறார். கடவுளை தான் நம்பாவிட்டாலும், சாமியார்கள் குறித்து கடுமையான விமர்சனப்பார்வை கொண்டிருந்தாலும், அவர்களையும் புரிந்து கொள்ளவே முயற்சித்தார். இந்திய ஞான மரபின் ஊற்றிலிருந்து ஏனேனும் கற்றுக்கொள்ள முடியுமா என்று திறந்த மனதுடன் அவர்களுடன் உரையாடியிருக்கிறார். பத்திரிகைகளில் அவர்களைக் கடுமையாகத் திட்டி எழுதியிருந்தாலும் தனி மனித உரையாடலின்போது வெறுப்பை உமிழாமல் மரியாதையுடன் நடந்துகொண்டிருக்கிறார். கடவுள் இல்லை என்று முகத்தைத் திருப்பிக்கொள்ளாமல் அவர்களிடம் கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறார். மறுபிறப்பை நம்பவேண்டும்போல் இருக்கிறது என்று தன்னுடைய இறுதிக்காலங்களில் சொன்னாலும் கடவுளின் மீதான நம்பிக்கை அவருக்குக் கடைசி வரை வரவே இல்லை. ஆனாலும் பல சாதுக்களின் காலில் விழுந்து வணங்கியிருக்கிறார், அவர்களிடமிருந்து சில ஆன்மிக அனுபவங்களைப் பெற்றிருக்கிறார். அனைத்து மத நூல்களையும் வாசித்து அவற்றைப் பகுத்தறிந்திருக்கிறார்.

          குஷ்வந்த் சிங்கின் அடுத்த தேடல், ‘அப்படியே கடவுள் இருக்கிறார் என்று வைத்துக்கொண்டாலும், அவர் எப்படிப்பட்டவர்?’, என்பதாக இருந்திருக்கிறது. கடவுள் எல்லையற்ற கருணை உள்ளம் கொண்டவர் என்று அவரால் ஏற்றுக்கொள்ள முடிந்ததில்லை. கண்ணெதிரே பூகம்பத்தாலும் வெள்ளத்தாலும் மக்கள் கொத்துக் கொத்தாக செத்துக்கொண்டிப்பது எந்த கருணாசாகரத்தின் டிசைன் என்று கேட்கிறார். பல ஆன்மிகவாதிகளிடம் சென்று இதுகுறித்து அவர் கேட்டாலும் அவருக்கு திருப்திகரமான பதில் கிடைக்கவே இல்லை. கர்மா, வினைப்பயன் என்று தர்க்கமற்ற பதில்கள்தான் வருகின்றனவே தவிர, கடவுள் ஏன் கருணையில்லாத ஒருவராக இருக்கக்கூடாது என்ற கோணத்தை எவருமே கருத்தில் கூட கொள்ளத் தயாராக இல்லை. தலாய் லாமாவுடனான சந்திப்பு இதில் விதிவிலக்கு. ‘கடவுள் கருணை உள்ளம் கொண்டவரா?’ என்ற கேள்விக்கு, ‘கடவுள் இருந்தால், அவர் அவ்வாறு இருக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று பதிலளித்தார் தலாய் லாமா. பஞ்சாபி மொழியில் கடவுள் குறித்த பேச்சு வழக்கு ஒன்று இருக்கிறது. கடவுளை ‘வத்தா பெபர்வா’ என்று அழைப்பார்கள். அதன் பொருள், ‘மனிதன் குறித்த அக்கறையே இல்லாத உயர்வானவர்’. குஷ்வந்த் சிங்கைப் பொறுத்தவரை கடவுள் இருந்தாரா இருக்கிறாரா என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். கடவுள் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, அவர் மனிதனின் இருப்பிற்கு அவசியமற்றவர். “கடவுளைப் பற்றிய தேடலில் ஈடுபட்டு ஓய்ந்து போனவன் நான், அவரைப் பற்றி நினைக்க நினைக்க அவர் வெறும் கற்பனையோ என்றுதான் தோன்றுகிறது. சர்வவல்லமை கொண்டவராக, படைப்பவராக, அழிப்பவராக அப்படியே ஒரு கடவுள் இருந்தாலும், அவர் நம்முடைய நியாய விதிகளையும் அற விழுமியங்களையும் கொண்டவர் அல்ல, என்பதே என் புரிதல்”, என்கிறார்.

          தன்னுடைய சமாதிக்கான வாசகத்தை குஷ்வந்த் சிங்கே தயாரித்து வைத்திருந்தார். அதோடு இப்பதிவை முடிப்பது பொருத்தமாக இருக்கும்.

மனிதன், கடவுள் இருவரையுமே விட்டுவைக்காத ஒருவன் இங்கே படுத்திருக்கிறான்;
இவன் ஒரு விரும்பத் தகாதவன், இவனுக்காகக் கண்ணீரை வீணடிக்காதீர்கள்;
இவன் தன்னுடைய வேடிக்கைக்காக மோசமானவற்றை எழுதி
க் களித்தவன்;
இவன் எமகாதகன், நல்லவேளை இவன் இறந்தான் என்று கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.


Gods and Godmen of India
Khushwant Singh
HarperCollins
248 pages
₹199/-

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

நவீன இந்தியாவின் சிற்பி

இந்தியாவும் இந்தியும்