Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

‘பாகுபலி’ இந்திய சினிமாவின் பெருமையா? + பாகுபலி-2 குறு விமர்சனம்


*Spoilers ahead*

ஒரு கருத்தை வெளிப்படுத்தும் முறையை வைத்து அதை Depiction, Endorsement என்று இரண்டாகப் பிரிக்கலாம். ஒரு கணவன் தன்னுடைய மனைவியை அடிப்பதுபோல் வெறும் காட்சிப்படுத்தினால் அது Depiction. அச்செயலை அத்திரைப்படம் நியாயப்படுத்த முயன்றால் அது Endorsement. இந்திய சமூகத்தில் இருக்கும் தலையாயப் பிரச்னைகள் சம்பந்தப்பட்டவற்றைப் பற்றி மேம்போக்கான, அரைவேக்காட்டுத்தனமான பஞ்ச் டயலாக்குகள் பேசி கைதட்டல்கள் வாங்குவதையோ, அல்லது அப்பிரச்னைகள் அப்படித்தான் என்று நியாயப்படுத்துவதையோ, அல்லது அவற்றைக் கவனிக்காததுபோல் கடந்து போவதையோதான் பெரும்பாலான திரைப்படங்கள் செய்கின்றன. பாகுபலியும் அதற்கு விதிவிலக்கல்ல. இதன் பின்னணியில், நமக்கு முதலில் எழும் கேள்வி, ‘பாகுபலி’ இந்திய சினிமாவின் பெருமையா? Is ‘Baahubali’ the pride of Indian Cinema?

சற்றும் யோசிக்காமல் ‘இல்லை’ என்று சொல்ல முடியும்.

ஏற்கனவேயே முதல் பாகத்தில் தமன்னா கதாபாத்திரத்திடம்(அவந்திகா) தன் ஆதிக்கத்தைப் பெருமையுடன் நிலைநாட்டியிருப்பார் கதாநாயகன். “கையில கத்தி, உடம்புல கவசம், ரத்த சிவப்பு கண்ணு, கோவத்தோட எரியுற மூஞ்சி; இந்த வெளி வேஷத்தைப் பத்தி நான் கேக்கல. அதுக்குப் பின்னால, அடி மனசுல, நெசமான நீ யாரு? நான் சொல்லவா? நீ ஒரு பொண்ணு, நான் ஒரு பையன். நான் உன்ன காதலிக்க வந்துருக்கேன்.” - ஒரு பெண் எவற்றையெல்லாம் செய்தால் அவை சுயத்தை மீறிய வேடம் ஆகும் என்று ஒற்றை வசனத்தில் போகிற போக்கில் சொல்லியிருப்பார்கள். ஒரு பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று வரையறுப்பதில்தான் நமக்கு என்ன ஒரு திருப்தி! ‘சமூகத்திற்கு ஒரு நல்ல செய்தி சொல்லிவிட்டோம், நம் பண்பாட்டைக் காப்பாற்றிவிட்டோம்’ என்ற மனநிறைவு மிக எளிதாக அதில் கிடைத்துவிடுகிறது. அவந்திகா அவனிடமிருந்து திமிற முயற்சிக்கிறாள், பாகுபலி எந்த கஷ்டமும் இல்லாமல் அவள் உடைகளை ஒவ்வொன்றாக உருவி (மொலஸ்டேஷன் என்று உள்ளே தள்ள வேண்டும்) அவளை அருவிக் கண்ணாடியில் கொண்டு வந்து நிறுத்துகிறான்; அதாவது ‘அவள் யார்’ என்று அவளுக்குக் காட்டுகிறான். என்ன வேடம் வேண்டுமானாலும் போடு, ஆனால் இதுதான் நீ; இந்தக் கணத்தில் நீ என் பராக்கிரமத்தில் மயங்கி உன் பெண்மையை ஒப்புக்கொள், என் ஆண்மைக்கு அடிபணி. இதுதான் பாகுபலியின் புரிதல். சிறுவயதிலிருந்து வெறும் மலையை மட்டும் ஏறிக்கொண்டிருந்தால் இப்படித்தான் ஆகும்.

சிவகாமி தேவியை உக்கிரமாகப் பேச வைத்ததால் ‘பாகுபலி’ பெண்களுக்கு மதிப்பு கொடுத்துவிட்டது என்றோ, தேவசேனா எதிர்த்துப் பேசிவிட்டாள் என்ற ஒரு காட்சியை வைத்து ‘பாகுபலி’ பெண்ணியம் பேசிவிட்டது என்றோ எடுத்துக்கொண்டுவிட முடியாது. தேவசேனாவின் மாமா சண்டையிடாமல் பெண்களுக்கு நடுவில் ஒளிந்துகொள்கிறான்; அதாவது ‘பெண்ணைப்போல் நடந்துகொள்கிறான்’ என்று ‘நகைச்சுவையாய்’ காட்சிப்படுத்த முயன்றிருக்கிறார்கள். திருமணத்தை மறுத்து ‘எனக்கு அனுப்பிய ஆபரணங்களை உன் மகனுக்கே அணிவித்து விடு’ என்று தேவசேனா என்ற பெண் எழுதும் கடிதத்தை சிவகாமி என்ற பெண் படித்துவிட்டுப் பெருங்கோபம் அடைந்து அதற்காக ஒரு போரையே தொடுக்கிறாள் (என்று ஒரு ஆண் பெருமையுடன் கதை அமைக்கிறார்). பல்வாள்தேவன் சாரைக் கேட்கவே வேண்டியதில்லை. லிம்பிக் சிஸ்டம் உயிர்த்தெழுந்து அவளை நான் அடக்கிக் காட்டுகிறேன் என்று ஹார்மோன்கள் துள்ளும். ‘பெண்ணைத் தொட்டவன் தலையை வெட்டணும்’ என்பதெல்லாம் நான்கு பேரைக் கைகாட்டிவிட்டு ஒரு சமூகமாக நாம் தப்பிக்கவே உதவும்.

வழக்கம்போல் நல்லவர்கள் வெளுப்பாக இருக்கிறார்கள். கெட்டவர்கள் கன்னங்கரேல் என்று இருக்கிறார்கள். தெற்கு எல்லையில் காலகேயர்களோடு சண்டையிட்டபடி மகிழ்மதி சுபிட்சமாக இருக்கிறது. தருண் விஜய்க்கு இப்படம் மிகவும் பிடிக்கும்.

சாதியடுக்கை இயல்பானது என்று ஏற்றுக்கொண்ட ஒரு சமூகத்தில் நமக்குக் கீழே விசுவாசிகள் இருப்பதில் நமக்கு அப்படி ஒரு அல்பப் பெருமை. அதே பரம்பரை பரம்பரையாக ராஜ்ஜியத்துக்கு நேந்து விடப்பட்ட அடிமைகள் இருந்தால் அது டபுள் பெருமை அல்லவா? யார் பக்கம் நிற்கவேண்டும் என்று கணக்கு போட்டு லாஜிக்கலான அடிமையாக இருக்கிறார் கட்டப்பா; ஆக மொத்தம் அடிமையாகவே இருக்கிறார். அவரை நாய் என்று அழைப்பதில் ராஜாவுக்கும் கூச்சமில்லை; அது இயல்பானதுதான், ஒரு நல்ல அடிமை அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான் என்று endorse செய்திருக்கும் இயக்குனருக்கும் கூச்சமில்லை. அடிமை முறையைத் தாங்கு தாங்கு என்று தாங்குகிறார்கள். ‘ஒரு அடிமைக்குத் தாத்தா ஸ்தானம் தந்தீர்களே’ என்று கட்டப்பா தேவசேனையிடம் ஆனந்தக்கண்ணீர் விடுகிறார். இங்கு எல்லாமே மேலிருந்து போடும் பிச்சையாகத்தான் இருக்கிறது, அதிலும் ஒரு அல்பப் பெருமை நமக்கு.

நமக்கு எப்பொழுதும் போர்க்கதைகள் மிகவும் பிடிக்கின்றன. இவனா அவனா என்று பார்த்து பார்த்து இடையில் மடிந்து போகும் விரர்களை நாம் சுலபமாக மறந்துவிடுகிறோம். யுத்தம் கோரமானது.  கறுப்பு வெள்ளைக் கதாபாத்திரங்களைப் படைத்து அவர்களுக்குள் ஆட்சிக்காக நிகழும் உள்நாட்டுச் சண்டையை 'தர்மம் vs அதர்மம்' என்று எளிமைப்படுத்தி, இந்த நவீன காலத்தில் epic என்று காட்டியிருப்பதை, அதை romanticise செய்திருப்பதையெல்லாம், இந்திய சினிமாவின் பெருமையாக எப்படிப் பார்ப்பது? மற்றொரு தரமான(subjective) பொழுதுபோக்குப் படம் என்ற அளவில் தான் இதைப் பார்க்க முடியும்.

இந்திய சினிமாவின் பெருமை என்றால் எப்படி இருக்கவேண்டும்? முதலில் அது இந்திய சமூகத்தின் பன்முகத்தன்மையை அரவணைக்க வேண்டும்; விளிம்பு நிலை மக்களைப் பிரதிநித்துவப் படுத்த வேண்டும்; நிறம், பாலினம் சார்ந்த கற்பிதங்களைக் கிழித்தெறிய வேண்டும்; அமைதியை விரும்ப வேண்டும்; பழம்பெருமை பேசாமல் நிகழ்காலப் பிரச்னைகளைப் பேச வேண்டும்; முக்கியமாகப் பெண்களை தெய்வமாகப் பார்க்கிறோம் என்று டகால்டியடிக்காமல் அவர்களை சுயமரியாதை மிக்கவர்களாகப் படைத்து அக்கருத்தை endorse செய்ய வேண்டும்; அரசியல் கேள்விகளும் தத்துவ விசாரணைகளும் மனதிற்குள் எழச் செய்ய வேண்டும்; தாராளவாதத்தையும் நவீனத்தையும் புறந்தள்ளாது இருக்க வேண்டும்; இவையத்தனையும் தாண்டி அது ஒரு நல்ல பொழுதுபோக்குத் திரைப்படமாகவும் இருக்க வேண்டும். பொழுதுபோக்கை எடுத்துவிட்டால் சினிமாவிற்கு என்ன உயிர் இருக்க முடியும்? கடைசியாக அது உலக சினிமாவாக இருக்க வேண்டும். வெளிநாட்டினருக்கு இந்திய சமூகத்தை நேர்மையாக அறிமுகப்படுத்த வேண்டும். இவையெல்லாம் கிட்டத்தட்ட வாய்ப்பே இல்லாத விஷயம். இங்கு டார்கெட்டே வேறாக இருக்கிறது. பெரிய பட்ஜெட் படங்கள் ஒவ்வொன்றையும் ‘இந்திய சினிமாவின் பெருமை’ என்று PR Stunt அடித்துக் காசு பார்க்க வேண்டியதுதான் வேலை. ‘பாகுபலி’ பண்பாட்டுப் பழமைவாதத்தைப் பின்னணியில் பேசுகிறது, எனவே அதை பெருமை என்று விளம்பரம் செய்யலாம். அடுத்து இந்திய சினிமாவின் பெருமை 'Tubelight' வரும் (அதில் இந்தோ-சீன போர் பின்னணி வேறு; போனஸ்). அதற்கடுத்து இந்திய சினிமாவின் பெருமை ‘எந்திரன்’ 2.0 வரும் (இதற்குக் காரணங்கள் கிடையாது, ட்விட்டரில் இப்படி நாமே ட்ரெண்ட் பண்ணினால்தான் உண்டு). இப்படி வருடத்திற்குக் குறைந்தபட்சம் ஒரு திரைப்படமாவது இந்திய சினிமாவைப் பெருமையோ பெருமை படுத்திக்கொண்டே இருக்கும்.

பாகுபலி-2 படத்தில் நல்லதே இல்லையா? (என் குறு விமர்சனம் வேண்டாதோர் இத்துடன் வாசிப்பதை முடித்துக்கொள்ளவும். நன்றி). தெலுங்கில் ஜனரஞ்சகத் திரைக்கதை எழுதும் முதன்மையானவர்களுள் ஒருவர் ராஜமௌலி. அவருடைய டிரேட் மார்க் ஸ்லோ மோஷன் காட்சிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அது இப்படத்தில் நிறையவே இருக்கிறது (அதனால்தான் படமும் நீளமாக இருக்கிறது, அது வேறு விஷயம்). குறிப்பாகக் கதாபாத்திரங்களின் எல்லா செயல்களுக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. முதல் பாகத்தில் தேவசேனா சுள்ளி பொறுக்குவது இரண்டாம் பாகத்தின் இறுதிக்காக; முதல் பாகத்தில் காட்டப்படும் லிங்கம் இரண்டாம் பாகத்தில் வருகிறது; முதல் பாகத்தில் பாகுபலியின் பாதங்களைத் தன் தலையின் மீது வைக்கிறார் கட்டப்பா, இரண்டாம் பாகத்தில் அதைச் சுற்றி ஒரு சென்டிமெண்ட்; முதல் பாகத்தில் வெட்டப்பட்ட பல்வாளின் மகனின் தலையை இரண்டாம் பாகத்தில் தேவசேனா தூக்கி வருவது, இப்படி subtlety மூலம் ‘பாகுபலி’யை ரசிக்கும்படி ஆக்குகிறார் ராஜமௌலி. பிரபாஸும் மரகதமணியும் படத்தில் நிகழ்த்துவது மாயாஜாலம். மரகதமணி இல்லாமல் ராஜமௌலியின் திரைப்படங்கள் முழுமை பெறாது என்னும் அளவிற்கு அவர் தனித்துத் தெரிகிறார். பிரபாஸுக்கு ஒரு chivalrous hero கேரக்டர். இவரைப் போல் ஆக வேண்டும் என்று ஒவ்வொரு இளைஞனும் நினைக்கும் அளவிற்குப் படத்தில் செம்மையாக நடித்திருக்கிறார். ‘ஆண்மை’ வெங்காயத்தைக் காட்டுவதிலிருந்து, வீரப்போர் புரிவது வரை, துர்நிகழ்வாக, inspiring. பிரபாஸ், ராணா, அனுஷ்கா மூவரும் இப்படத்திற்காக உடற்கட்டை மெருகேற்றியிருக்கிறார்கள். இதில் அனுஷ்காவைப் பற்றிப் பலர் சொல்வதில்லை. ‘இஞ்சி இடுப்பழகி’க்குப் பிறகு மீண்டும் எடையைக் குறைக்கக் கடுமையாக உழைத்திருக்கிறார். பிரபாஸ், ராணாவுக்கு இணையாக அவருக்கும் பாராட்டுகள் கிடைக்க வேண்டும். இரண்டாம் பாகத்தில் ரம்யா கிருஷ்ணனின் இருப்பு அதிகமென்றாலும் எனக்கு முதல் பாகத்தில் அவரின் presence இன்னும் பிடித்திருந்தது (முதல் பாகத்தில் ‘நான் செய்த பாவத்திற்குப் பரிகாரமாய்...’ என்று ஒரு வசனத்தை வைத்து இரண்டாம் பாகத்தில் அவர் கேரக்டரையே மொத்தமாக காலி செய்திருக்கிறார்கள்).  சத்யராஜுக்கு இது சிகரமான ரோல் எல்லாம் இல்லை, ஆனால் நிச்சயம் மக்கள் மனதில் நிலைத்திருக்கும் ரோல். அட்டகாசம் புரிந்திருக்கிறார். பிறகு டைட்டில் கார்டு அற்புதம்! இத்திரைப்படம் ‘வேறு தளம்’ என்கிறார்களே, டைட்டில் கார்டு ஒன்றுதான் அந்த வேறு தளத்தில் இருக்கிறது. VFX பற்றி நான் பொதுவாக சொல்வதில்லை. காசிருந்தால் அது நன்றாக இருக்கும்; காசில்லையென்றால் மொக்கையாக இருக்கும், அவ்வளவுதான் என் புரிதல்.

படத்தில் என்ன குறைகள்? முதல் இருபது நிமிடங்களிலேயே என்ன ஆகப்போகிறது என்று தெரிந்துவிட்டது. சரி அதை எவ்வாறு சொல்லப் போகிறார்கள் என்றுதான் அனைவரும் பார்க்கிறார்கள். பாஸ்கெட் பாலைப் போல் வாளைக் கேட்ச் பிடித்து கேட்ச் பிடித்து கொல்கிறார்கள் கட்டப்பாவும் பாகுபலியும்; அது சிலருக்குப் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. அநியாயத்துக்கு புஜபல பராக்கிரம அக்கிரமங்கள் படம் நெடுக அரங்கேறுகின்றன. முழங்கையால் கற்சிலையை நொறுக்குவது, பேரல் பேரல்களாக மதில் சுவரைத் தாண்டுவது என்று அட்டூழியம் புரிந்திருக்கிறார்கள் (நான் ரியலிச விசிறி அல்ல, பட் இது டூ மச்). பனை மரத்தின் பொருளாதாரப் பயன்கள் பற்றி வாட்சப்பில் படித்திருப்போம்; பனை மரத்தின் இராணுவப் பயன்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமா? பாகுபலி-2 பாருங்கள். வைகை தெர்மாகோல் திட்டத்திற்கு எந்த விதத்திலும் குறைவில்லாத ஒரு பெருந்திட்டம் அந்த ஒற்றைப் பனை மரத்தை வைத்து நிறைவேற்றப்படுகிறது.  பையன் பாகுபலிக்கு எங்கேயிருந்து அத்தனை பலம் வருகிறது? அவன் அப்பாவிடமிருந்து வருகிறது. டொனால்ட் டிரம்ப் பேசும் ‘ஸ்மார்ட் ஜீன்’ தியரிதான்.

படத்தின் production value மட்டுமே திரைத்துறையை முன்னேற்றும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. So for me, Baahubali-2 is a mindless entertainer with good script splattered here and there. You may or may not watch it. Peace.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி