Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

கடிதம் - அன்னையர் தினமும் மாதவிடாயும்

Anonymous
14th May, 2017

வணக்கம் விஷ்ணு. ‘மாதவிடாயின் போது பெண்களைத் தீட்டு என ஒதுக்கி வைக்கும் சமூகத்திற்கு அன்னையர் தினம் கொண்டாட அருகதை இல்லை’ என்ற கருத்தை நீ பகிர்ந்திருந்ததைப் பார்த்தேன். என்னைப் பொறுத்தவரை அன்னையர் தினம் கொண்டாடுவதென்பது தேவையில்லைதான். குடும்பம் ஒற்றுமையுடன் வாழ்வதை மரியாதையுடன் நோக்கும் ஒரு சமூகத்தில் அன்னையர் தினம் அவசியமல்ல என்பது என் கருத்து. ஆனால் தீட்டு என்பது மாதவிடாயின் போது பெண்கள் வேலை செய்துவிடக்கூடாதே என்று அவர்களுக்கு ஓய்வு கொடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட ஒன்று. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல் மாற்றங்களை ஆரோக்கியத்துடன் எதிர்கொள்ள அந்த ஓய்வு அவசியமானது. இதை உணராமல் இக்காலத்துப் பெண்கள் ஓய்வெடுக்காமல் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள்; அவர்களே அவர்களின் உடலைப் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.

அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாமல் போகிற போக்கில் கருத்து சொல்வது என்பது இன்றைக்கு ஃபேஷன் ஆகிவிட்டது. அதை நீயும் செய்வாய் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ஒரு விஷயம் பழமையானதாகவோ மத நம்பிக்கைகள் சம்பந்தப்பட்டதாகவோ இருந்துவிட்டால் அதைப் பரிகாசம் செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. அவ்வாறு செய்வதும் என்னைப் பொறுத்தவரை மூட நம்பிக்கையே.


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


Vishnu Varatharajan
14th May, 2017

வணக்கம் அக்கா. என் அக்காவிடம் நான் வெளிப்படையாகவே பேசலாம் என்று நினைக்கிறேன். அன்னையர் தினம் வேண்டுமா வேண்டாமா என்பதல்ல இங்கு பிரச்னை. இயற்கையான மாதவிடாயைத் தீட்டு என்று ஒதுக்கி வைக்கும் சமூகம் கயமை மிக்கது என்ற அக்கருத்துடன் நான் ஒத்துப்போகிறேன்; அவ்வாறு நினைக்கும் சக பெண்களோடு துணை நிற்க விரும்புகிறேன், அவ்வளவே. மற்றபடி இதைக் கொண்டாடு கொண்டாடாதே என்று உத்தரவு இட யாருக்கும் உரிமை இல்லை.

எல்லாவற்றிற்கும் ஏதேனும் ஒரு காரணம் இருக்கிறது, நிச்சயமாக; அக்காரணம் சமூகம் வளர வளர மாறி வந்திருக்கிறதா, அக்காரணமே காலப்போக்கில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே சம வாய்ப்புகளை உருவாக்க விடாமல் தடுக்கிறதா என்னும் அடிப்படையிலேயே இதை கவனிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஓய்வெடு என்று சொல்வதற்கும் ஒதுக்கி வைப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. தொற்றுக் கிருமிகள் பரவிவிடும் என்பதால் கோயிலுக்குள்ளும் சமையலறைக்குள்ளும் விடவில்லை என்றால் இன்று சானிட்டரி நாப்கின்கள் அந்தப் பிரச்னையைத் தீர்த்துவிட்டன; காலத்திற்கேற்றால்போல் நம் மரபுகளும் மாற வேண்டுமே? பெண்கள் மாதவிடாயின் போது உள்ளே வரக்கூடாது என்று தடுக்கும் புத்திசாலித்தனம் இருக்கும் கலாசார அமைப்புகளுக்கு ஆண்கள் கரமைதுனம் செய்துவிட்டு வருவதைத் தடுக்கும் வழிமுறைகளைக் கண்டுபிடிக்கும் புத்திசாலித்தனம் ஏன் இல்லாமல் போய்விட்டது? பெண்கள் தெய்வம் என்றால் தெய்வத்தை ஏன் கருவறைக்குள் அனுமதிக்க மறுக்கிறோம்? ஏன் ஒரு பெண்ணால் இன்றுவரை போப் ஆண்டவர் ஆக முடியவில்லை? ஏன் ஒரு இமாமாகவோ கலீஃபாவாகவோ ஆகமுடியவில்லை? மத அதிகாரம் பெண்களுக்கு மறுக்கப்பட்டே வந்திருக்கிறது, அதன் காரணிகளில் ஒன்றாகத்தான் மாதவிடாயை நான் பார்க்கிறேன்.

இராமானுஜரை வலைவீசி தேடினார்கள்; அவர் அமைப்புகளைக் கேள்வி கேட்டார் என்பது ஒரு காரணம். இன்று அவர் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறார். கோயில்களை விபச்சார விடுதிகள் என்றார் காந்தி. நிலைத்துவிட்ட கருத்தாக்கங்களையும் வழக்கங்களையும் கேள்வி கேட்டுத் தொல்லைப்படுத்துவதன் மூலம்தான் பயனுள்ள மாற்றங்களுக்கான உரையாடலை நம்மால் துவக்க முடியும். கேள்வி கேட்பது வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் மிகப்பெரும் கடமையாக நான் பார்க்கிறேன்.

எது உனக்கு நல்லது என்று அறிவுரை செய்வதற்கும் இதை நீ செய்துதான் ஆகவேண்டும் இல்லையென்றால் மதத் துவேஷம்/அபச்சாரம் ஆகிவிடும் என்று கட்டுப்பாடு விதிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். உடம்பு கெட்டுவிடும் போகாதே என்று அறிவுறுத்துவதும், தீட்டு என்று திண்ணையில் உட்கார வைப்பதும் ஒன்றல்ல. உனக்கு எது நல்லது என்று நாங்களே முடிவு செய்துவிட்டோம், அதை மீறுவது குற்றம் என்று ராணுவ ஆட்சியைப் போல் அதை நியாயப்படுத்தவும் முனைகிறோம். வண்டி ஓட்டினால் புகை வருகிறது, உடம்பு கெட்டுவிடும், அப்படியென்றால் ஆண் உட்பட யாருமே வண்டி ஓட்டக்கூடாது. நாம் இங்கு மிகவும் போலித்தனமாகத்தானே நடந்துகொள்கிறோம்? வண்டி ஓட்டுவதால் அடையும் பயன்கள் எல்லாவற்றையும் நாம் அனுபவித்துவிட்டு, ஒரு தவறை நியாயப்படுத்த இன்னொரு தவறைக் கைகாட்டக் கூடாது என்று சொல்லி எளிமையாக நகர்ந்துவிடுகிறோம். மாதவிடாயைக் காரணம் காட்டி பெண்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவது சமூக அநீதி. உடல் பலத்தையும் கற்பையும் காரணம் காட்டி இராணுவத்தில் பெண்கள் மறுக்கப்படுவதும் அதே போல்தான். மாதவிடாய் காலத்தில் வெளியே போ என்று யாரையும் தள்ளிவிடவில்லை; சுயமாக முடிவெடுத்து வெளியே வருபவர்களை, சம வாய்ப்பு பெற விரும்புபவர்களை, உனக்கு தெரியாது எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கிறது என்று தடுப்பதோ, அல்லது அதே மாதவிடாயைக் காரணம் காட்டி மதத்துவேஷம் ஆகிவிடும் என்று வெளியே நிற்க வைப்பதோ தவறு என்பதே இங்கு கருத்தாக இருக்கிறது.

மற்றபடி பெண்களை நம் சமூகமும் குடும்ப அமைப்பும் மரியாதையாக நடத்தியது என்பதில் நான் முற்றிலுமாக முரண்படுகிறேன் அக்கா. அது மற்றொரு நேரத்தில்.


--------------------------------------------------------------------------------------------------------------------------------------


Anonymous
14th May, 2017

வணக்கம் விஷ்ணு. உன்னுடைய பெரும்பாலான கருத்துகளோடு நான் மாறுபடுகிறேன். கேள்வி கேட்பதன் மூலம்தான் அடுத்த தலைமுறையை வழிநடத்த முடியும் என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அக்கேள்விகள் சரியான திசையை நோக்கி வீசப்பட வேண்டும்; அந்தப் புள்ளியிலேயே உன்னுடன் வேறுபடுகிறேன். எது சரியான திசை என்பது அவரவர் பார்வைகளைப் பொறுத்தது என்றாலும், அது எல்லா நேரத்திலும் அப்படி இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.  மாதவிடாயைப் பற்றியோ, பெண்களுக்கு இச்சமூகம் அளிக்கும் மரியாதையைப் பற்றியோ நாம் பேசுகையில், மரபார்ந்த, அதே நேரத்தில் நவீனத்தை வரவேற்கக்கூடிய குடும்பத்திலிருந்து வந்த ஒரு பெண்ணாக இவற்றில் எனக்கு உன்னைவிட மேம்பட்ட புரிதல் இருப்பதாகவே நான் நம்புகிறேன். நாம் நேரில் சந்திக்கும்போது இதைப் பற்றி மேலும் விவாதிக்கலாம்.

Comments

Post a Comment

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி