Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 1



          லேண்ட்மார்க்கில் மனு பகவான்(21ம் நூற்றாண்டு மனிதர்) எழுதிய ‘The Peacemakers: India and the Quest for One World’ என்ற புத்தகத்தைக் கண்டவுடனே காணாததைக் கண்டது போல் ஐநூறு ரூபாய்க்கு அடித்துப் பிடித்து வாங்கிவிட்டேன். ஹார்ப்பர் கோலின்ஸ் பதிப்பகத்தின் 237 பக்க வெளியீடு. காந்தியைப் போல் நேருவும் இன்று எவ்வளவு தேவைப்படுகிறார் என்று அறிய இப்புத்தகம் அவசியம். இப்புத்தகம் சொல்லிய தகவல்களில் வெகு சில தகவல்களை மட்டும் இங்கே முடிந்தவரை தருகிறேன்.

          ஆண்டு 1941, நாஜி படைகள் போலாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து என்று ஒவ்வொரு நாடாகக் கபளீகரம் செய்துகொண்டிருந்தன. முசோலினி வடக்கு ஆப்பிரிக்காவையே மிரட்டிக்கொண்டிருக்க, ஆசியாவில் ஜப்பான் சீனாவின் நடுப்பகுதி வரை வந்துவிட்டிருந்தது. யாருக்கும் எதுவும் புரியவில்லை. அனைத்துப் போர்களையும் முடிக்க வந்த போர் என்றுதானே முதலாம் உலகப்போரை அழைக்கிறார்கள்? அப்பொழுது இதற்குப் பெயர் என்ன? பின்னோக்கி சிந்தித்தார்கள். பிரிட்டனும் ஃப்ரான்சும் முதலாம் உலகப் போரின் முடிவில் அதிகமாக அமெரிக்காவிடம் கடன் வாங்கியிருந்தன. அமெரிக்கா அதைத் திருப்பித் தந்தே ஆகவேண்டும் என்று கறாராக சொல்லிவிட்டது. மூன்று வேளை சாப்பாட்டுக்கே அல்லல்படும் நிலைக்கு வந்துவிட்ட பிரிட்டனுக்கு இதெல்லாம் நடக்கிற காரியமா? வந்தது வெர்சைல்ஸ் ஒப்பந்தம். உலக அமைதிக்கு ஊறு விளைவித்ததற்காக ஜெர்மனி அணிக்குக் கடும் பொருளாதார சுமைகள் விதிக்கப்பட்டன. இழப்பீடாக ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை குறிப்பிட்ட காலத்திற்கு பிரிட்டன் அணிக்கு ஜெர்மனி வழங்குவது, அந்த பணத்தை வைத்து அமெரிக்கக் கடனை அடைப்பது, அவ்வப்போது அமெரிக்கா ஜெர்மனிக்கு நிவாரண உதவிகள் செய்வது, இப்படியாக ஒப்பந்தம் போடப்பட்டு ஜெர்மனியின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது பிரிட்டன் அணி. மக்களின் அதிருப்தியைப் பின்னாளில் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார் ஹிட்லர்.

          வுட்ரோ வில்சனின் பதினான்கு அம்ச அறிக்கைக்குப் பிறகு லீக் ஆஃப் நேஷன்ஸ் அமைக்கப்பட்டது. அதற்கான விதையைப் போட்டவராலேயே அமெரிக்காவை அதில் உறுப்பினராய் சேர்க்க முடியவில்லை. மேலும் முக்கிய நாடுகளான பிரிட்டன், ஃப்ரான்ஸ் போன்றவை லீகின் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. போதாக்குறைக்கு 1929-ல் வந்து சேர்ந்த பொருளாதார நெருக்கடி. வங்கிகள் ஒவ்வொன்றும் டாமினோக்கள் போல் சடசடவென்று திவாலாக, ஜெர்மனி - பிரிட்டன் – அமெரிக்க பணப்பரிவர்த்தனைக்கு இடையூறு ஏற்பட்டது. உலகளாவிய அளவில் ஏற்பட்ட அந்த நெருக்கடி ஜெர்மனியையும் பாதித்தது. அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்ற ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் முதல் நூறு நாட்களுக்குள்ளாகவே நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் இறங்கிவிட்டார். அமெரிக்காவுக்கு வாய்த்தது போன்ற ஒரு தலைமை ஜெர்மனிக்கு வாய்க்கவில்லை. விளைவு, அரசாங்கங்கள் வந்து போயின, ஜெர்மனி அலங்கோலமாய்க் கிடந்தது. மக்களின் அதிருப்தியையும் வெறுப்பையும் மூலதனமாக்க் கொண்டு ஆட்சியேறினார் ஹிட்லர். 1933-ம் ஆண்டு முதல் மொத்த ஜெர்மனியும் அவர் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ‘ஜெர்மனிக்குப் புது ரத்தம் பாய்ச்சியாக வேண்டும், அதற்கு முதலில் தீயவை கழிதல் வேண்டும்’, என்று யூதர்கள் மீதும் மார்க்சிஸ்டுகள் மீதும் உள்நாட்டில் ‘அதிகாரப்பூர்வமாக’ வன்முறை நிகழ்த்தப்பட்ட்து. முத்தாய்ப்பாக பிஸ்மார்க்கின் அகண்ட ஜெர்மனி கனவு ஹிட்லரையும் பற்றிக்கொள்ள, அதன் முதல் கட்டமாக போலாந்து நாட்டை ஜெர்மனி ஆக்கிரமிக்க, லீக் ஆஃப் நேஷன்ஸ் அமைப்பு சரியான முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் படுதோல்வி அடைய, இரண்டாம் உலகப் போர் துவங்கியது.

          இதுவரை உலகம் மனிதர்களைத் தரம் பிரித்து வைத்திருந்த எந்த ஒரு பிரிவிலும் ஹிட்லர் வரவே இல்லை. அவரைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. என்ன மாதிரியான மனிதர் இவர்? உலகத்திடம் ஈவு இரக்கமே இல்லாதவராக இருக்கிறார், ஆனால் பிராணிகளை அளவு கடந்து நேசிக்கிறார். மொத்த உலகத்திற்கும் வேறு ஒரு கோணத்தில் சிந்திக்க ஒரு புதிய பரிணாமம் தேவைப்பட்டது. ஒரு பற்றுகோல் தேவைப்பட்டது. ஒரு நம்பிக்கை தேவைப்பட்டது. விளைவு, மொத்த உலகமும் இந்தியாவில் ஒரு குக்கிராமத்தில் இராட்டையை சுற்றிக்கொண்டிருந்த காந்தியை நாடியது.

          காந்தியும் சற்றே கலங்கித்தான் போயிருந்தார், ஏற்கனவேயே ‘அனைத்து மனிதர்களுக்குள்ளும் ஒரு நல்லவன் இருப்பான், சந்தர்ப்பமும் சூழ்நிலையும்தான் அவனைக் கெட்ட செயல்கள் புரியத் தூண்டுகிறது. அவனை வெறுக்காமல் அவனை நேசிப்பது மட்டுமே அவனை நெறிப்படுத்துவதற்கான முதல்படி’, என்ற தன் கொள்கைகளின் படி ஹிட்லருக்குக் கடிதங்கள் அனுப்பிப் பார்த்தார். பலன் கிடைக்கவில்லை. காந்தி என்னும் ஷெர்லாக் ஹோம்ஸால் ஹிட்லர் என்னும் மொரியார்டியைப் புரிந்துக்கொள்ளவே முடியவில்லை. குறைந்தபட்சம் அவரால் செய்ய முடிந்தது போருக்குப் பின்னால் உலகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று யோசிப்பதுதான். இந்த சிந்தனைப் பயணத்தில் அவருடன் இணைந்து பயணிக்க முடிவு செய்தார் நேரு.

          காந்திக்குத் தெளிவாகவே தெரியும், போருக்குக் காரணம் ஆசை, நாடு பிடிக்கும் ஆசை, என்று. அதன் நீட்சியான காலனிய ஏகாதிபத்தியம் முதலில் ஒழியாமல் உலக அமைதி சாத்தியமில்லை. மனித உரிமையும் மனசாட்சியும் வழிநடத்தும் ஒரு ஒன்றுபட்ட உலகத்தை காந்தியும் நேருவும் கனவு காண ஆரம்பித்தார்கள். தெரிந்தோ தெரியாமலோ பிரிட்டன் பலநூறு நாடுகளை இந்தியா என்னும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்துவிட்டது. காந்தியும் இந்தியப் புவிசார் தேசியம்தான் இந்தப் பரந்துபட்ட நாட்டிற்கு ஏற்றது என்று அதை மக்களிடம் பரப்பி சுதந்திர வேட்கையை உண்டாக்கிக்கொண்டிருந்தார். சுதந்திர இந்தியா ஏன் ஒரு ஒன்றுபட்ட, சகிப்புத்தன்மை கொண்ட, வேற்றுமைகள் மதிக்கப்பட்ட ஒரு உலகத்திற்கு ஒரு மாதிரி வடிவமாகவும் முன்மாதிரியாகவும் இருக்கக்கூடாது? முதல் சிக்கல். சுதந்திரம் கிடைக்க வேண்டும்.

          1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்கப்பட்டு, அதனால் காந்தியும் நேருவும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். நேரு சிறையில் ஒன்றுபட்ட உலகத்தைப் பற்றி யோசித்துகொண்டே ‘Discovery of India’ எழுத ஆரம்பித்தார். ஒரு அரை நிர்வாணப் பக்கிரியால் தன்னுடைய நாட்டையே அசைத்துப் பார்க்க முடிகிறதே என்று பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு பயங்கர எரிச்சல். சாம்பர்லேனின் மூனிச் ஒப்பந்தத்தை ஹிட்லர் ’ஃபூ’ என்று ஊதியபின் ஏற்பட்ட அதிருப்தியில் சர்ச்சில் ஆட்சிக்கு வந்தார். காலனியாதிக்கத்தை ஆதரிக்கும், பிரிட்டனின் கீர்த்தியைப் பற்றிப் பெருமை கொண்டிருக்கும் லேசான பழமைவாதி அவர். அவர் தன் நாட்டைக் காப்பாற்றுவதா இந்தியர்களின் கூச்சலைக் கேட்பதா? தலை வெடித்துவிடும் போல் இருந்தது அவருக்கு. ஜப்பானால் அமெரிக்காவின் பேர்ல் துறைமுகம் தாக்குதலுக்கு உள்ளாக, ஒரு வழியாக அமெரிக்காவும் போரில் குதித்தது. இந்தியாவிலும் தன் நாட்டிலும் சிக்கல்களை சந்தித்துக்கொண்டிருந்த சர்ச்சிலுக்கு அமெரிக்கா தனக்கு உறுதுணையாக வந்திருக்கிறதே என்று ஒரு சிறு ஆறுதல். அதற்கும் வேட்டு வைத்தார் ஒருவர். பெயர்: விஜயலட்சுமி பண்டிட்.

          பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பெண் காபினெட் அமைச்சராகவும்(மருத்துவ மற்றும் சுகாதாரம்) மனித உரிமை செயல்பாட்டாளருமாக அவர் ஏற்கனவேயெ நேருவின் தங்கை என்ற பிம்பத்தைத் தாண்டி தனக்கான ஒரு தனித்த அடையாளத்தைப் பெற்றிருந்தார். திறமையான பேச்சாளர், அரசியல்வாதி, இராஜதந்திரி என்று பரவலாகக் கொண்டாடப்பட்டார். 1938-ல் ஏற்பட்ட காலரா பரவலால் தன் தாயையும் அத்தையையும் இழந்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்ந்து போயிருந்த அவருக்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டது. அப்பொழுது அரசியல் ரீதியாகப் பாரீஸிற்குப் பயணம் செய்யவிருந்த நேருவுடன் ஐரோப்பா சென்ரார். அங்கு செக்கோஸ்லோவாக்கிய சுகாதார அமைச்சருடன் விஜயலட்சுமி மரியாதை நிமித்தமான சந்திப்பை நடத்திக்கொண்டிருந்த சமயம், நேருவிற்கு ஒரு மனிதரிடமிருந்து இரண்டு முறை அழைப்பு வந்தது. பெனிட்டோ முசோலினி நேருவை விருந்தினராக இத்தாலிக்கு அழைத்திருந்தார். சற்றும் யோசிக்காமல் அழைப்பினை நிராகரித்தார் நேரு. அப்பொழுதுதான் சாம்பர்லேன் ஹிட்லரிடம் மூனிச் ஒப்பந்தம் போட்டார். ஒப்பந்தம் கையெழுத்தானதும் மக்கள் அனைவரும் சர்ச்சுகளுக்கு சென்று அழுது தீர்த்தனர். ஒரு பெரும் போர் தவிர்க்கப்பட்டது, கர்த்தருக்கு நன்றி, என்ற கூக்குரல்கள் எங்கும் ஒலித்தன. விஜயலட்சுமியும் அழுதார். போர் மற்றும் வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பினார். ஆனால் நடந்த சம்பவங்கள் அந்த விருப்பத்திற்கு நேர் மாறாக இருந்தன. இருவரும் மீண்டும் இந்தியா திரும்பியபோது ஐரோப்பாவில் ஏற்கனவேயே போர் துவங்கியிருந்தது.

          இரண்டாம் உலகப்போரில் இந்திய தேசிய காங்கிரஸிடம் கலந்தாலோசிக்காமலேயே பிரிட்டன் இந்திய வீரர்களை ஆப்பிரிக்காவில் இறக்கியது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அனைத்து இந்திய அதிகாரிகளும் அமைச்சர்களும் பதவி விலகப் பரிந்துரைத்தார் காந்தி. காந்தி சொல்படி கேட்ட அனைவரையும் சிறையிலடைத்து அழகு பார்த்தது பிரிட்டன் அரசு. அதில் விஜயலட்சுமியும் அவரது கணவர் ரஞ்சித்தும் அடக்கம். ஜப்பான் ஒரு கட்டத்தில் இந்தியாவின் கிழக்கு எல்லை வரை வந்துவிட. சுதந்திரம் வேண்டும் என்று இந்தியா வேறு அதிகமாகக் குடைச்சல் கொடுக்க ஆரம்பிக்க, இந்தியர்களை சமாதானப்படுத்த வேண்டும் என்று வேண்டா வெறுப்பாக க்ரிப்ஸ் கமிஷனை அனுப்பி வைத்தார் சர்ச்சில்.

          க்ரிப்ஸுடன் பேச்சுவார்த்தை நடந்த சமயம் தன் கல்லூரிப் படிப்பை முடித்து நாடு திரும்பினார் இந்திரா காந்தி. அவருக்கும் பிரோஸ் காந்திக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்த சமயம் பார்த்து சீனாவின் சியாங் கைய் ஷேக்கும் அவர் மனைவியும் ரூல்வெல்ட் அனுப்பியிருந்த ஒரு அதிகாரப்பூர்வமற்ற செய்தியுடன் இந்தியா வந்திருந்தார்கள். ரூஸ்வெல்ட் அனுப்பியிருந்த செய்தி இதுதான்:

"உலகம் இப்பொழுது இருக்கும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி பிரிட்டனுடன் ஒத்துழைக்க வேண்டும். பதிலுக்கு போர் முடிந்தவுடன் அமெரிக்கா பிரிட்டனை நெருக்கி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க வழி வகுக்கும்."

          முதலாம் உலகப் போர் முடிவில் பிரிட்டனிடம் சுதந்திரம் கேட்டு ஏமாந்தது போதாதா என்று இந்த அதிகாரப்பூர்வமற்ற ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் ஒரு நல்ல விஷயமாக விஜயலட்சுமிக்கும் திருமதி.சியாங்கிற்கும் நல்லுறவு ஏற்பட்டது. இருவரும் பெண் விடுதலையிலும் முன்னேற்றத்திலும் பெரும் ஆர்வம் கொண்டிருந்தனர். திருமதி.சியாங் அப்பொழுது உலக அரங்கில், குறிப்பாக அமெரிக்காவில் பெரிதும் மதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர். அவரது பரிந்துரையின் பேரில் தன் இரண்டு பெண் குழந்தைகளை அமெரிக்காவின் வெல்லஸ்லீ பல்கலைக்கழகத்தில் படிக்க அனுப்பினார்(பயணம் கப்பல் வழியாக, படைத் துருப்புகளுடன்). ஒரு மகளின் படிப்பிற்கு திருமதி.சியாங்கே பொருளாதார உதவிகள் செய்துகொடுத்தார். மகள்கள் இருவரும் அங்கு சென்று சேர்ந்ததும் விஜயலட்சுமியும் பின்னே சென்று அவர்களைப் பார்ப்பதாக இருந்தது. ஆனால் அப்பொழுது பார்த்து வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆரம்பிக்கப்பட, அதனால் மீண்டும் சிறை சென்றார் விஜயலட்சுமி.

          உடல் காரணங்களால் விடுப்பு பெற்று சிறையிலிருந்து வெளியே வந்தபின் விஜயலட்சுமி நேராக அவர் வீட்டிற்கு செல்ல, வீட்டிற்குள் அவரை இரண்டு காவலர்கள் வரவேற்றார்கள். வீடு அலங்கோலமாக இருந்தது. தன் அனுமதியின்றி வீட்டை சோதனை செய்ததற்காக எதிர்த்துக் கேள்வி கேட்டதற்கு, க்ரிப்ஸ் பேச்சுவார்த்தை தோல்விக்குப் பிறகு நேரு ரூஸ்வெல்ட்டிற்கு எழுதிய ஒரு கடிதத்தின் பிரதியைத் தேடி வந்திருப்பதாக அவர்கள் சொல்ல, அது இங்கே இல்லை, ஒழுங்காக பொருட்களை இருந்த இடத்தில் வைத்துவிட்டுப் போங்கள் என்று தைரியமாகக் கூறினார். அவர்கள் அந்த இடத்தை விட்டுச் சென்றதும் அந்தக் கடிதம் தன்னிடம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்துகொண்டார்.

          தொடர்ந்த உடல் உபாதைகளால் 1943-ம் ஆண்டு முறைப்படி சிறையிலிருந்து அவர் விடுதலையடைந்திருந்த சமயத்தில் அவர் இரு மகள்களும் பத்திரமாக அமெரிக்கா சென்று சேர்ந்த தகவல் வந்து சேர்ந்தது. கூடவே இந்தியாவில் வங்கத்திலிருந்து ஒரு சோகமான செய்தி வந்து சேர்ந்தது. வங்கத்தில் பஞ்சம். 20-ம் நூற்றாண்டு கண்ட கொடுமையான பஞ்சங்களில் ஒன்று அது. உடனே வங்கம் சென்றார். இது இயற்கையால் ஏற்பட்ட பஞ்சம் இல்லை என்று உடனே கண்டுகொண்டார். தவறான அரசாங்க கொள்கைகளே இப்பஞ்சத்திற்கு வழிவகுத்தன என்று ஒரு அறிக்கை தயாரித்தார் (இப்பஞ்சத்திற்கு சர்ச்சிலின் இனவாதமும் ஒரு காரணம் என்பதை பின்னாளில் அமர்த்தியா சென் சொல்லியிருப்பார்). அங்கேயே சில மாதங்கள் தங்கியிருந்து நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

          மாதங்கள் கழித்து வீடு திரும்பி இன்னும் விடுதலையடைந்திருக்காத தன் கணவர் ரஞ்சித்தைக் காண சிறைக்கு சென்றார். அவர் உடல் மெலிந்து மரணப்படுக்கையில் இருப்பதைக் கண்டதும் உடனே அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று முறையிட்டார். அதற்குள் காலம் கடந்திருந்தது. ரஞ்சித் இறந்துபோனார். உடைந்து போனார் விஜயலட்சுமி. மேலும் இடியாக ரஞ்சித்தின் சொத்துகளுக்கு விஜயலட்சுமி உரிமை கோர முடியாது என்று ரஞ்சித்தின் உறவினர்கள் வழக்கு தொடர்ந்தனர். ‘All India Women’s Conference’ அமைப்பின் தலைவருக்கே இந்தக் கதியென்றால் அப்பொழுது சாதாரண இந்தியப் பெண்களுக்கு? அப்போது இருந்த சட்டப்படி வெற்றி உறவினர்கள் பக்கம்தான் என்று தெரிந்திருந்தும் தீராத துக்கத்திலும் கொதித்துப்போய் வாதிட்டார். பத்திரிகை கவனம் இந்த வழக்கிற்குக் கிடைக்க ஆரம்பிக்க, உறவினர்கள் விஜயலட்சுமிக்கு மொத்தமாக ஒரு இழப்பீட்டுத் தொகையைத் தருவதாகவும் வழக்கை முடித்துக்கொள்ளலாம் என்று கூறினர். அந்தத் தொகையும் சொற்பம்தான் என்று தெரிந்தது. ஆனால் பம்பாய் சிறையிலிருந்த காந்தி அத்தொகையை ஏற்றுக்கொண்டு குடும்பத்துடன் சமாதானமாகப் போகும்படி அறிவுரை கூறினார். அரைமனதோடு அதனை ஏற்றுக்கொண்டார். பின்னாளில் அந்த அறிவுரை தான் இருந்த மனநிலைக்கு சரியானதே என்று குறிப்பிட்டார்.

          அடுத்த இடி விழுந்தது. இம்முறை காந்திக்கு. பம்பாய் சிறையில் அவர் மனைவி கஸ்தூரிபாய் இறந்துபோனார். துடிதுடித்துப் போனார் மனிதர். உடல் மெலிய ஆரம்பித்தது. உடல்நிலையைக் காரணம் காட்டி மே மாதம் அவர் விடுதலை செய்யப்பட்டார். காந்தி, விஜயலட்சுமி, இருவரும் மனதுடைந்து போயிருந்தனர். நேரு இன்னமும் சிறையில் இருந்தபடி வெளியே நடந்த செய்திகளை ஒன்று விடாமல் கவனித்தபடி ஒன்றுபட்ட உலகம் குறித்துக் கனவு கண்டுகொண்டிருந்தார். வெளியே உலகம் வெடித்துக்கொண்டிருந்தது.

          விஜயலட்சுமி காந்தியுடன் இரண்டு வாரங்கள் கழித்த பின் மீண்டும் வங்கம் சென்று நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். திருமதி.சியாங்க், திருமதி.எல்லியனார் ரூஸ்வெல்ட் ஆகியோரின் துணையுடன் குறுகிய வேளையில் சுமார் 25,000 டாலர்கள் வரை நிதி திரட்டினார் (இன்றைய மதிப்பில் 3,20,000 டாலர்கள்). இந்த செய்தி உலக ஊடகங்களில் பெரிதாகப் பேசப்பட்டது. அனைவரும் விஜயலட்சுமியை வியந்து புகழ்ந்தனர். காந்தி அவரை அழைத்தார். இதுதான் சமயம் என்றும் உடனே அமெரிக்கா சென்று இந்திய விடுதலை பற்றிப் பேச வேண்டும் என்று சொன்னார். விஜயலட்சுமிக்கும் இது சவாலானதாகப் பட்டது. மேலும் தன் மனக்காயங்கள் ஆறும்வரை தன் கவனத்தை இதில் திசை திருப்புவதும் நல்லதுதானே, என்று உடனே சம்மதித்தார்.

          அமெரிக்கா செல்வது குறித்தும் அங்கு யாரோடு தொடர்பில் இருப்பது என்பது குறித்தும் வேலைகள் பரபரவென்று நடந்தன. விமான பயணச்சீட்டு வாங்க வேண்டியதுதான் பாக்கி. அப்பொழுதுதான் தெரிந்தது, விஜயலட்சுமியின் பாஸ்போர்ட் அவர் வீட்டில் இல்லை என்று.

          சியாங் கைய் ஷேக் மற்றும் அவரது மனைவி ஆகியோரின் இந்திய வருகை, விஜயலட்சுமியோடு திருமதி.சியாங் அதீத நட்பு பாராட்டியது, போன்றவைகளை அடிப்படையாக வைத்து வரப்போகும் நிகழ்வுகளை பிரிட்டன் அரசு கச்சிதமாக ஊகித்திருந்தது. நேரு ரூஸ்வெல்ட்டிற்கு எழுதிய கடிதத்தைத் தேடுகிறோம் என்ற போர்வையில் அவர் பாஸ்போர்ட்டைத் தூக்கியிருந்தார்கள் அந்தக் காவலர்கள். நேரு சிறையில், காந்தி இன்னும் இழப்பிலிருந்து மீளவில்லை. விஜயலட்சுமி மட்டும்தான் சர்வதேசத் தளத்தில் காங்கிரஸ் சார்பாக எஞ்சியிருக்கும் ஒரே துருப்புச் சீட்டு. ஆக அதற்கும் வேட்டு வைத்தது பிரிட்டன் அரசு. இப்போதைக்கு இந்திய காங்கிரஸ் உலக அரங்கில் கூச்சல் போடாது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டார் சர்ச்சில்.

(தொடரும்)

காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 2
காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 3  
காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 4

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி